செய்திகள்

அன்னையர் தினத்துக்காக ‘அம்மா’ மீது 5 மொழிகளில் பாட்டு: இசையமைத்து வெளியிடுகிறார் எஸ்.ஜெ.ஜனனி

‘‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே…’

பி.வாசுவின் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் ஜேசுதாசின் வசீகரக் குரலில் (அம்மா பண்டரிபாய் – மகன் சூப்பர் ஸ்டார் ரஜனி தோன்றும் காட்சிகள் மனத் திரையில் ஓடுமே…) உருவான பாடல் இன்றளவும் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்து, கேட்பவரை உருக வைத்து விடுகிறதா இல்லையா?

அதைப் போலவே நெஞ்சை நெகிழ வைக்கும், உள்ளம் உருக வைக்கும் ‘அம்மா’ மீதான ஒரு பாடலை, அம்மாவின் அருமை – பெருமைகளைப் படம் பிடித்து, தன் இசையில் பாடி வெளியிட இருக்கிறார் எஸ்.ஜெ. ஜனனி, இளம் பாடகி, ‘கலைமாணி’ விருது பெறும் இசையமைப்பாளர். தமிழில் மட்டுமல்ல – தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 5 மொழிகளிலும் வெளியிட இருக்கிறார் என்பது ஒரு தனிச்சிறப்பு.

‘பிரபா’ எனும் திரைப்படத்தின் இசையமைப்பாளர், எஸ்.ஜெ.ஜனனி. புகழ்பெற்ற பாடகர் பாலமுரளி கிருஷ்ணா இறுதியாகப் பாடிய (பூவே பேசும் பூவே… படம்: பிரபா) திரை இசைப் பாடலுக்கு இசையமைத்ததும் இவர்தான். இம்மாதம் 12ந் தேதி அன்னையர் தினத்திற்காகப் பாடலை வெளியிட இருக்கும் ஜனனியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:–

“அம்மான்னா எல்லோருக்கும் பிடிக்கும்தான். அன்னையர் தினத்திற்காக ஒரு பாட்டு கொண்டுவரலாம்னு மாமா சங்கர்-–கணேஷ் (இசையமைப்பாளர் அல்ல). அவங்களோடு பேசித் திட்டமிட்டேன். அதற்காக, ஸ்பெஷலா ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணினேன். வழக்கமா வர்ற வரிகள் மாதிரி இல்லாமல், கேட்கிறவர்களுக்கு நெருக்கமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, நான் நினைச்ச மாதிரியே ரொம்ப அழகான வரிகளை எழுதித் தந்திருக்கிறார். முதல்ல, தமிழில் மட்டும் இந்தப் பாடலைக் கொண்டுவரலாம்னுதான் ப்ளான். ஆனா, திடீர்னு ஒருநாள் இதையே பல மொழிகளில் கொண்டுவந்தா என்னன்னு தோணுச்சு. பிறகு, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு ஐந்து மொழிகளில் அம்மாவைப் பற்றின பாட்டு வரப்போகுது.

தெலுங்கில் பாரதி பாபு, கன்னடத்தில் சந்ரூ, இந்தியில் அரவிந்த் தேஷ் பாண்டியும் பாடல் வரிகளை எழுதியிருக்காங்க. தனி ஆல்பமாக இசையமைக்கும்போது சில குறிப்பிட்ட இசைக்கருவிகளைத்தான் அதிகம் பயன்படுத்துவாங்க. ஆனா, பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். பாடலை நானே பாடியிருக்கேன்.

உலகின் பரம்பொருள் நீதானே; அதிலும் அரும்பொருள் நீ… என்ற வரி ரொம்பப் பிடிக்கும். “தாயைத் தேட, தனிச்சொல் தேட… “ என்ற வரியில் அம்மாவை அழைக்கத் தனியான சொல்லைப் பயன்படுத்தும் குழந்தை என எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் உருவானபோது என் அம்மாதான் கண் முன்னாடி நின்னுட்டே இருந்தாங்க. ஏன்னா, அவங்கதான் என்னோட இசை வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம்செய்துட்டு கூடவே இருக்காங்க. மாமா சரியாக வழிநடத்திட்டு இருக்கிறார். இந்தப் பாடலை அன்னையர் தினமான மே 12-ம் தேதி ரிலீஸ் பண்றோம்.

‘பிரபா’ படத்துக்குப் பிறகு சில படங்கள் வந்துச்சு. கதை உள்ளிட்ட விஷயங்கள் பொருத்தமா இல்ல. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து இண்டிபென்டெண்ட் ஆல்பங்களை வெளியிட்டிட்டு இருக்கேன். சென்ற ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிச்சாங்க. கலிஃபோர்னியா பீஸ் சாங் விருதில் நாமினேஷனில் என் பாட்டும் இருக்கு”. இவ்வாறு ஜனனி கூறினார்.

* * *

‘அம்மாவும் நீயே…’ என்று பிஞ்சு வயதில் குரல் கொடுத்தார் கமல்.  ‘தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை…’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம்…’ என்று ஆராதித்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அம்மா என்றால் அன்பு… என்று அடையாளம் காட்டினார் ஜெயலலிதா.

அந்த வரிசையில் உலகின் பரம்பொருள் நீதானே…’ என்று அனுபவம் பேசி இருக்கிறார் எஸ்.ஜெ. ஜனனி. இப்பாடலில். அம்மாவைத் தொட்டிருக்கிறாரே, அப்புறம்… கலை வாழ்விலும், தனி வாழ்விலும் எப்படி உயர்வில்லாமல் போகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *