செய்திகள்

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்துக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை, செப். 3–

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களின் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழில் வழிபட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், தமிழில் அர்ச்சனை செய்ய சட்ட உரிமை உள்ளதா என இந்து அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த இந்து அறநிலையத்துறை ஆணையாளர், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம் 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1996 இல் புத்துயிர் பெற்றது.

எதிர்த்த மனு தள்ளுபடி

இது சம்பந்தமாக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தொடர்பாக, ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்த ரங்கராஜன் நரசிம்மனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையுமில்லை என ஏற்கனவே பல தீர்ப்புகள் உள்ளன என்பதால், தடைவிதிக்க முடியாது என்று கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *