போஸ்டர் செய்தி

அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட் அனுமதி

சென்னை, ஜன. 11

அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கும் பணி நடைபெற்று வந்தது.

பொதுமக்கள் வரிசையில் நின்று பரிசு பொருட்களையும் ரொக்கப் பணத்தையும் வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க தடை விதித்தது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கக் கூடாது என்றும், பரிசு பொருட்களை மட்டும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த ஐகோர்ட் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை அனைவருக்கும் வழங்கலாம் என்று அனுமதி வழங்கியது. மேலும் அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை பெற 10 மணி நேரத்திற்கு மேலாக எதற்காக நிற்க வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.

மொத்தமாக இலவசங்கள் வழங்கக் கூடாது என்று முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நீதிமன்றம் பிறப்பித்துள்ள பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கும் அனுமதியால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *