செய்திகள்

அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை: உச்ச நீதிமன்றம்

டெல்லி, டிச. 7–

யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்த பட்டபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர். இது தொடர்பான பொது நலன் மனுவை சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜக்தீப் சோக்கர் ஆகிய 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் கூறியதாவது:–

நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (என்எப்எஸ்ஏ) அமலில் உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக, அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். இந்த சட்டம் அமலில் இருந்தபோதும் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போனது என்று கூறினார்.

அப்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறும்போது, என்எப்எஸ்ஏ சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர் பயன் பெறுகின்றனர். பொதுமக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை இந்திய அரசு, மாநில அரசுகள் மூலமாக ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது என்று கூறினார்.

இந்திய அரசின் கடமை

இரு தரப்பு வாதத்துக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:–

நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமையாகும். நாட்டில் உள்ள யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பது நமது பண்பாடு. எனவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை இந்திய ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும். இது இந்திய அரசின் கடமையாகும்.

இதில் இந்திய அரசு எதையுமே செய்யவில்லையென்று நாங்கள் கூறவில்லை. அதேநேரத்தில், இது தொடர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *