செய்திகள்

‘‘அனைவருக்குமான அரசாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு’’: உதயநிதி பேச்சு

Makkal Kural Official

சென்னை, நவ. 28–

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும், ஏழை – எளிய மக்கள் – மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் – தூய்மைப்பணியாளர்கள், – சுகாதாரப்பணியில் ஈடுபடுவோருக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், அனைவருக்குமான அரசாக, அனைத்துச் சமுதாயத்துக்குமான அரசாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. தலைவர் சொல்வார். எனவே, இந்த நிகழ்ச்சி எனது பிறந்தநாள் விழாவாக இருந்தாலும், திராவிட மாடல் அரசின் எடுத்துக்காட்டு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக இந்த நலத்திட்டங்களை இன்று நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் பயன்பெற்று நாளை 4 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிலைக்கு உங்களை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு நம் அரசும், முதலமைச்சரும் உங்களுக்குத் துணை நிற்பார்.

4 மாதம் முக்கியம்

இதே எழுச்சி, உணர்வுடன் அடுத்த 5 மாதங்கள் களத்தில் பணியாற்றிட வேண்டும். இப்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்கின்றன. அதில் உங்களின் வாக்குகளை முதலில் நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களின் உறவினர்கள், நண்பர்கள் வாக்குகளை எல்லாம் உறுதி செய்ய வேண்டும். அந்தப் பணிகளில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சிறப்பான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று செய்திகள் வருகின்றன. இருந்தாலும், நான்கு மாத காலம் மிக மிக முக்கியமான காலம்.

முதலமைச்சர் கொடுத்த ‘இலக்கு வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்பதுதான். அதையே எனது பிறந்தநாள் வேண்டுகோளாக வைத்து, அந்த இருநூறு தொகுதிகளில், இந்த கிழக்கு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி, வெற்றி என்று வர வேண்டும். அதுவே நமது இலக்கு என்று கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேகர்பாபு

விழாவில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மாநகராட்சி மேயர்கள் பிரியா, தினேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன், கழக நிர்வாகிகள் தமிழன் பிரசன்னா, பரிதி இளம்சுருதி, உமாகாந்த், ஷேக் அப்துல்லா, நன்மாறன், பகுதிச் செயலாளர்கள் சுதாகர், வேலு, இளைஞர் அணி அமைப்பாளர் வானவில் விஜய், தொகுதிப் பார்வையாளர்கள் யாழினி, கிருஷ்ணமூர்த்தி, முனியாண்டி, நரேந்திரன் உள்பட கழக முன்னணியினர் பலரும் கலந்துகொண்டனர் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *