சென்னை, அக்.19–
நாளை தீபாவளி பண்டியையொட்டி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களது இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளைப் பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி கூறியுள்ளார்.
![]()





