செய்திகள்

அனைத்து அரசு பஸ்களிலும் டிஜிட்டல் பயண அட்டை திட்டம்: தமிழக அரசு விரைவில் அறிமுகம்

Makkal Kural Official

சென்னை, பிப்.3-–

அனைத்து அரசு பஸ்களிலும் டிஜிட்டல் பயண அட்டை திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, நெல்லை மண்டலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் என 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.

இவற்றின் மூலம் தினம் தோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. லாபநோக்கம் இன்றி, தமிழக அரசு பஸ் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

மாநகர பஸ்களில், பள்ளி செல்லும் மாணவ-–மாணவிகள், மகளிர், முதியோர் ஆகியோர் இலவச பயணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. அதே போன்று கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. அதே போன்று வெளியூர் செல்வதற்கு ஆம்னி பஸ்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் சொகுசு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் மயமாக்கி, மக்களுக்கு பஸ் சேவைகளை எளிமைப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர பஸ்களின் வருகை குறித்து தெரிந்து கொள்வதற்கான ‘சென்னை பஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், ஏற்கனவே இணைய தளம் மூலம் அரசு பஸ்களை முன்பதிவு செய்து வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட டி.என்.எஸ்.டி.சி. செயலியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அத்துடன் பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு பரிசுகளையும் அறிவித்தது. பொங்கல் பண்டிகையின் போது இந்த செயலி மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மோட்டார் சைக்கிள், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

சிங்காரச் சென்னை

டிஜிட்டல் பயண அட்டை

இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகர அரசு பஸ் பயணிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சிங்காரச் சென்னை டிஜிட்டல் பயண அட்டையை கடந்த ஜனவரி 6-ந்தேதி அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தினார். இந்த அட்டையின் மூலம் அரசு பஸ்களில் மட்டுமின்றி மெட்ரோ ரெயில்களிலும் பயணிக்கலாம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே, தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் இதுபோன்ற டிஜிட்டல் பயண அட்டையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் பிரிண்ட் செய்யும் செலவு குறைகிறது. அதோடு பயணிகள் எளிதாக பயணம் செய்ய முடியும் என்றும் அரசு நம்புகிறது. இந்த அட்டை மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களிலும் முன்பதிவு செய்யலாம்.

இந்த டிஜிட்டல் பயண அட்டை என்பது ‘நியர் பீல்டு டெக்னாலஜி’ (என்.எப்.சி.) என்ற தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. எனவே, இதனை அனைத்து இடங்களிலும் மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும். தற்போது கண்டக்டர்கள் பயன்படுத்தி வரும் மின்னணு டிக்கெட் வழங்கும் கருவியில் டிஜிட்டல் பயண அட்டையை தொட்ட உடன் பயண அட்டையில் இருந்து பயணத்திற்கு தேவையான பணமானது போக்கு வரத்துக் கழகத்தின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். அதைத் தொடர்ந்து கண்டக்டர் டிக்கெட் வழங்குவார்.

இந்த டிஜிட்டல் பயண அட்டையை பஸ் பயணிகள் முன்கூட்டியே ரீச்சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் பஸ்களில் பயணிப்பதற்கு முன்பே கணிசமான தொகை முன்கூட்டியே கிடைத்து விடுகிறது.

இந்த டிஜிட்டல் பயண அட்டை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது டிஜிட்டல் பயண அட்டைகளை பயன்படுத்தும்போது பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு டிக்கெட் வழங்காமலேயே மக்கள் பயணம் செய்யும் நடைமுறைகள் கூட கண்டறியப்பட்டு அறிமுகப் படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரீசார்ஜ் செய்வது எப்படி?

தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சிங்கார சென்னை பயண அட்டைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம் அந்த அட்டையை வாங்கும் போது குறைந்தபட்சம் ரூ.100 ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். மேலும் 100-ன் மடங்குகளில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். பயண அட்டையில் உள்ள பணத்தை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியாகும் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயண அட்டையில் எவ்வளவு பணம் மீதம் இருக்கிறது என்பதை https://transit.sbi என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மாநகர பஸ் பணிமனைகளிலும் தெரிந்து கொள்ளலாம். அதே போன்று, பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள பஸ் பணிமனைகளின் டிக்கெட் கவுண்ட்டர்களில் பணம் செலுத்தியோ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ‘பேமெண்ட் கேட்வே’ மூலம் இணையதளத்திலும், போன்-பே, பேடிஎம், எஸ்.பி.ஐ. யூனிபே உள்ளிட்ட யு.பி.ஐ. மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதே போல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் டிஜிட்டல் அட்டைகளுக்கும் ரீஜார்ஜ் செய்ய வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *