புதுடெல்லி, டிச. 7–
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நமது அரசு பள்ளிக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. இதன் மூலம் அதிகளவிலான மாணவர்கள் பயன் பெறும் அதே வேளையில், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். தேசியக் கல்விக் கொள்கையின்படி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நாடு முழுக்க புதிய 28 நவோதயா பள்ளிகளைத் தொடங்கவும் நமது அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் குடியிருப்புகள் மற்றும் பள்ளிக் கல்வியின் தரம் பெரியளவில் விரிவடையும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுக்க திறக்கப்படவுள்ள புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் 82,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படும்.
2025–26ம் ஆண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளில் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவதற்கும், மற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் ரூ.5,872.08 கோடி செலவிடப்பட உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது வரை 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மாஸ்கோ, காத்மாண்டு, தெஹ்ரான் என 3 பள்ளிகள் வெளிநாட்டில் உள்ளன. இவற்றில், 13.56 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர் என அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.