சிறுகதை

அந்த முகமா இந்த முகம் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

ஏறத்தாழ 50 வருடங்களுக்கும் மேலான குக்கிராம வாழ்க்கை.

சாதி, மத வித்தியாசம் பாராமல் அனைவரையுமே அண்ணே, தம்பி, மாமன், மச்சான்,தாத்தா,பாட்டி என்று அன்பை பாசத்தை மட்டுமே மற்றவர்மீது பொழியும் அங்கு யார் வீட்டிலாவது ஏதாவதொரு நல்லது, கெட்டது என்றாலும் அனைவருமே ஓடோடி வந்து தங்கள் வீட்டு நிகழ்வுகள்.

போல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதென, எதையுமே எதிர்பாராத வெள்ளந்தியான மக்கள்..

அதுவும் குறிப்பாய் என் வீட்டுக்கு காலையில் இருந்து இரவு படுக்கப் போகும் வரையிலும் தேவைப்பட்டால் அதன் பிறகும் எங்களை வந்து பார்ப்பதும்,”ஐயா,அம்மா நலமா? எதனாச்சும் வேணுமா” என கேட்பவர்களையெல்லாம் ஒரே அடியாய் விட்டு விட்டு

சென்னையில் உள்ள மகள்,மருமகன், ஒரே பேரன், வயது 12…  மற்றும் மனைவியை இழந்து பிள்ளையின் நிழலில் அடைக்கலமாகியிருக்கும் சம்பந்தி வீட்டுக்கு நாங்கள் வந்து 15 நாட்களுக்கு மேலாயிற்று.

அதுகூட மகளும் மருமகனும் கிராமம் வரும் போதெல்லாம் “ஏம்பா–அம்மா இந்த கிராமத்திலயே இத்தனை வயசிலும் கிடந்து உழன்றுகிட்டிருக்கீங்க?

ஒரு வைத்திய வசதி உண்டா இங்கே? ஆனா இங்கே உள்ளவங்க எங்களை தங்கமா பார்த்துக்கிறாங்கனு நீங்க சொன்னாலும் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை..

அவங்க என்ன நினைப்பாங்க எங்களைப் பத்தினு கொஞ்சமேனும் நீங்க யோசிச்சு பார்த்தீங்களா? சீக்கிரம் எல்லாத்தையும் வைண்டப் பண்ணிக்கிட்டு எங்களோட வந்து மிச்ச சொச்ச காலத்தை சந்தோஷமா நீங்க கழிக்கணும்னு நாங்க விரும்பறம்.உங்க இரண்டு பேர்களையும் வயசான காலத்தில இங்கே தனிமையில் விட்டுட்டு நாங்க ராத்தூக்கம் தொலைச்ச நாட்கள் எத்தனைனு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க?” என்ற எங்கள் பெண்ணிடம்

“இத பாரம்மா…..” என்று

நான்,பேச ஆரம்பித்ததும்,”இருங்கப்பா, நீங்க எந்தச் சப்பக்கட்டும் கட்ட வேணாம்.

என்னங்க நீங்கதான் உங்க மாமனார்-மாமியார் கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் நாம படற மன வேதனையை” என்ற மகளின் முகம் பார்த்து மருமகனும் “ரெடி, ஸ்டார்ட்,காமிரா, ஆக்சன்” என்று சொன்னதும் அந்த கதாபாத்திரம் பிழியப்பிழிய உணர்ச்சி வயப்பட்டு வசனம் பேசுவதுபோல்,

“ஆமாம் அப்பா, உங்களை அப்பாவாதான் நானும் நினைக்கிறேன்..(“நம்பிட்டேன் போதுமா!” என்று நானும் வசனம் பேசத் தயாராய் இல்லை)” என்ற தன் மகனை சம்பந்தி ஒரு ஏக்கப் பார்வை பார்த்த போதே அங்கு அவர் நிலை உணர முடிந்தது.

“இந்த உலகமே நாடக மேடையடா” என்றதொரு பழைய திரைப்படப்பாடல் என் நெஞ்சில் வந்து, வந்து போயிற்று.ஆனாலும் எங்களிடம் மிகவும் பணிவுடனும் பாசத்துடனும் இருப்பதாக காட்டிக் கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதை உணர்ந்தோம்

“அகத்தின் அழகு” வேணாமே இதற்கு மேல்.. அதே சமயம் வெளித் தோற்றத்தை மட்டுமே வைத்து ஒருவரை எடை போடலாமா என்றும் தோன்றியது..

இப்போதே எனக்கு வயது 85.. மனைவிக்கு 78.. எப்படியும் யார் துணையாவது வேண்டும்தான் மிச்சமுள்ள காலத்தை ஓட்ட.

இவர்கள் சொல்வது போல எந்தவித ரத்த சொந்தமும் இல்லாத அன்பை மட்டுமே அள்ளி அள்ளி வழங்கும் கிராமத்து மக்கள் எல்லாம் செய்வார்கள்தான் என்றாலும் யாராவது ஒருவர் எப்போதாவது மகளை, மருமகனை பற்றி இழிவாய் பேசி விட்டால் எங்கள் மனம் என்ன பாடுபடும்? அதற்கு இடம் கொடுக்கலாமா” என்று பலவாறாய் குழம்பிப் போயிருந்த நிலையில்

ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் பிடிக்காமல் நான் பாத்ரூம் போகவேண்டி அதுவும் மகள்–மருமகன் அறையைத் தாண்டி போக வேண்டியிருந்த நிலையில், அவர்கள் பேசிக்கொண்டிருந்தது.. அதுவும் எங்களை பற்றி துல்லியமாய்.. அப்படியே மனம் விட்டுப்போயிற்று..

“இந்த உலகமே நாடக மேடையடா” என்ற பழைய பாடல் நெஞ்சில் மறுபடி வந்து போயிற்று.

நல்ல வேளை கிராமத்து வீட்டை இன்னம் காலி செய்யவில்லை நாங்கள். உடனே ஒரு தெளிவான முடிவுக்கு வந்தேன்.

மனைவியிடம் சொன்னேன் “நாளைக்கே நாம நம்ம கிராமத்துக்கு போறம்..ரெடியாய் இரு” என்று,,

“என்னாச்சு உங்களுக்கு? வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிக்கிச்சா?” என்ற மனைவியிடம் புன்னகையை மட்டுமே உதிர்த்தேன்,

நேற்று இரவு நான் கேட்டதை சொன்னால் அவள் தாங்க மாட்டாள்தான். வெளிப்படையாய் கொட்டாவிட்டாலும் அவள் மனமும் பிள்ளை, மருமகளின் போக்கு குறித்து மனதுக்குள் புழுங்கி தவிக்கலாம்.. அதுவே அவளுக்கு நாளடைவில் தீராத மன நோயாய் உருப்பெறலாம்.

எந்தக் காரணம் கொண்டும் எப்போதும் இதை நான் சொல்ல மாட்டேன். அதனால் மறுநாள் காலையில் மகன்,மருமகளிடம் அதுகூட அவர்கள் ஓய்வாய் இருந்ததொரு தருணத்தில் ஒரு செயற்கை புன்னகையுடன், “நாங்கள் கிராமத்துக்கே போக விரும்புவதாக” சொல்ல,..

மகளும் மருமகனும் “என்னப்பா, இப்படி பண்றீங்களே? உங்களுக்கு இங்கே என்ன குறை? யாராச்சும் உங்க மனம் புண்படறாப்பல ஏதாச்சும் பேசினாங்களா இங்கே? ஏன் இந்த திடீர் முடிவு?எங்களை மன நிம்மதி இல்லாம ஆக்கணும்னு நீங்க நினைச்சா நாங்க என்ன செய்ய முடியும்? போய்ப்பாருங்க கொஞ்ச நாட்கள்..

அப்புறம் உங்களுக்கு எப்ப இங்கே வரணும்னு தோணுதோ, அப்ப எந்த தயக்கமும் இல்லாம வந்துடுங்க. ஆனா என்ன ஒண்ணு, நாங்கதான் உங்களைப்பத்தி எப்பவும் கவலைப் பட்டுக்கிட்டே நிம்மதி இல்லாம இருப்போம்” என்றார்கள் கண்ணீருடன்.

“இருப்பதற்காகத்தான் வந்தோம்..

இருக்க முடியாமல் போகிறோம்”என்று நினைத்துக்கொண்டே என்கிராமச் சொந்தங்களை நோக்கிப் புறப்பட்டேன் என் மனைவியோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *