சிறுகதை

அந்த அழகிக்கு தெரியாது! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

அவளின் சிவந்த கன்னங்களும் பொன்னிற தலை முடிகளும் துறு துறு கண்களும் ஒரு தனியழகாக என் மனதைக் கவர்ந்தது.

எனக்கு வயது 65 க்கு மேலாகி விட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் இருந்தேன். எனது மகன் வெங்கடேஸ்வரன் வட அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். சிகாகோவின் புறநகர் பகுதியில் மிக்சிகன் ஏரியின் ஓரத்திலிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் அவன் தனியாக வசித்து வந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. என்னை அவன், ‘அமெரிக்காவிற்கு வந்து ஒரு ஆறுமாதம் தங்கிவிட்டுப் போங்கள்’ என்று அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்ததுடன், விமான டிக்கெட்டையும் புக் செய்து அனுப்பி விட்டான். நானும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு முன்பே இங்கு அமெரிக்கா வந்துவிட்டேன்.

தினந்தோறும் மாலை வேளையில் மிக்சிகன் ஏரியின் கரை வழியாக வாங்கிங் செல்வேன். இந்த மிக்சிகன் ஏரி உலகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் மூன்றாவது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதன் கரைகளில் விதம் விதமான புதிய புதிய எனக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத மரங்களையும் செடிகளையும் பார்க்கிறேன். அதில் ஒரு மரத்தின் இலைகள் கோடைக்காலத்தில் பச்சை பசேலென்று நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் குளிர் காலம் வந்தால் அந்த மரத்தின் இலைகள் நல்ல சிவப்பு நிறத்தில் மாறி, பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக மாறிவிடும்!

நான் இரண்டு வாரத்திற்கு முன்பு சிகாகோவின் மிக்சிகன் ஏரியின் நீண்ட கரையில் நடந்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஆங்காங்கே அந்தவகை மரங்களின் இலைகள் நிறம் மாற ஆரம்பித்திருந்தன. பல மரங்களின் இலைகள் பாதி பச்சையாகவும் பாதி சிவப்பாகவும் இருந்தன. அப்போது ஒரு இடத்தில் அந்தவகை மரத்தின் ஒரு சிறு மரம் நட்டு வளர்க்க ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். மரம் அதன் இலைகள் முழுவதும் சிவப்பாக மாறி மிக அழகாக காட்சியளித்தது.

அந்த மரத்தின் அருகேதான் அவள். அவள் ஒரு அழகான அமெரிக்க இளம்பெண். தனது கையிலிருந்த ஐபோன் மூலம் செல்பி புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் ஒரு கையில் ஐபோனையும் இன்னொரு கையில் ஒரு வெள்ளை நிற நாயையும் பிடித்திருந்தாள்.

அது வாங்கிங் செல்வோருக்கான பாதை. அதிக ஜன நாட்டமில்லை. பொதுவாகவே அங்கு அதிக நடமாட்டமிருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துக் கொண்டிருப்பார்கள். இங்கே செல்லப் பிராணியாக நாய் வளப்பவர்கள் அதிகம். பொதுவாக பெண்கள்தான் நாய்களை அழைத்துக் கொண்டு வாங்கிங் செல்கிறார்கள்.

நான் அந்த மரத்திற்கு அருகே சென்றபோது, என்னைப் பார்த்த அந்த அமெரிக்க இளம்பெண், தன்னுடைய ஐபோனை என்னிடம் நீட்டியபடி ஆங்கிலத்தில் ஏதோ சொன்னாள். எனக்கு ஆங்கிலம் அறவே தெரியாது. ஆனாலும், ‘அந்த மரத்திற்கு அருகே நிற்பது போல தன்னை புகைப்படம் எடுக்கச் சொல்கிறாள் அந்த அழகி என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிந்தது.

எனக்கு போட்டோ எடுப்பதில் ஓரளவு தேர்ச்சி உண்டு. அதனால் அந்த ஐபோனை தைரியமாக வாங்கி ( அது அருமையான விலையுயர்ந்த போன்! அந்த பட்டுக்கையை தொட்டு வாங்கும்போதே, அதன் விலை மதிப்பை உணர முடிந்தது! ) அந்த மரம், அந்த அழகி, அந்த நாய் மூன்றும் கவராகும்படி ஒரு போட்டோ எடுத்தேன். அதன்பிறகு ‘அப்படியே நில்லுமா’யென்று சொல்லும் பாவனையில் கையைக் காட்டிவிட்டு, இன்னும் இரண்டு மூன்று கோணங்களில் ‘கிளிக்’ செய்தேன். அதன் பிறகு அந்த ஐபோனை அந்த அழகியிடம் நீட்டினேன்.

போனை வாங்கி, கேலரிக்கு சென்று புகைப்படத்தைப் பார்த்ததும், அவள் முகத்தில் ஒரு புன்னகையும் மகிழ்ச்சியும் தோன்றியது. ஏதோ சூப்பர் என்பது போல வேகமான ஆங்கிலத்தில் என்னை பாராட்டினாள் அந்த பொன்னிற பெண்!

நான் உடனே, “I do not know English !” என்று சொல்லியபடி, என்னுடைய ஸ்மார்ட் போனை போட்டோ எடுப்பதற்கு ஏற்றபடி செட் செய்து, நீட்டியபடி அந்த மரத்தை சுட்டிக் காட்டினேன்.

‘அந்த மரத்திற்கு அருகே நான் நிற்பது போல போட்டோ எடுத்துத் தரச் சொல்கிறார்’ என்பதை புரிந்துக் கொண்டு, “ஓ…!” என்றபடி என்னுடைய செல்போனை வாங்கிக் கொண்டாள். நான் அந்த மரத்திற்கு அருகே சென்று நின்றேன். என்னை புகைப்படம் எடுத்த பிறகு எனது செல்போனை என்னிடம் நீட்டினாள். புகைப்படம் நன்றாகவே வந்திருந்தது.

இத்துடன் நான் பேசாமல் இருந்திருந்தால், அந்த பெண் அவள் வழியில் போயிருப்பாள். ஆனால் அந்த அழகியிடம் இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் போல எனக்குத் தோன்றியது.

உடனே நான், அந்த மரத்தை தட்டிக் காட்டியபடி, “நேம்? ” என்றேன். உடனே புரிந்துக்கொண்ட அந்த பெண்ணும் “ட்ரீ நேம்?” என்றாள். நானும் “யெஸ்!” என்றபடி தலையை அசைத்தேன்!

அவ்வளவுதான், “ட்ரீ நேம்.. ட்ரீ நேம்…” என்று முணு முணுத்தபடி அந்த வெள்ளைக்கார கிளி யோசிக்க ஆரம்பித்து விட்டது. அவளின் சிவந்த முகம் கொஞ்சம் வெளுத்து விட்டது!

நம்ம ஊரிலேயே பலருக்கு கிளுவை மரம், கல்யாண முருங்கை மரம், வேங்கை மரம் என்று பல மரங்களின் பெயர் தெரியாமல் இருக்குமல்லவா, அதுபோலதான் அந்த பெண்ணின் நிலையும்!

நான், “பரவாயில்லை” என்று தமிழிலேயே சொல்லிவிட்டு நடக்கப் பார்த்தேன். ஆனால் அவளோ, ‘சற்றுப் பொறுங்கள்’ என்பது போல கையைக் காட்டிவிட்டு, தனது ஐபோனில் கூகுளில் ஏதோ தேட ஆரம்பித்தாள்! அவளது ஐபோன் ஸ்கிரீனில் விதம் விதமாக இலை இலையாக படங்கள் வருவது என் கண்களிலும் பட்டது. இரண்டு மூன்று நிமிடங்கள் முயன்றும் அந்த அழகியால், அந்த மரத்தின் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.என்னைப் பார்த்து, ஆங்கிலத்தில் ஏதோ வருத்தம் தெரிவித்துவிட்டு, அந்த மரத்தையும் என்னையும் ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, அவள் கிழக்கு நோக்கி நாயுடன் நடந்தாள். நான் மேற்கு நோக்கி நடந்தேன்!

அன்று இரவு வீட்டில் என் பையனிடம், “இங்கே பனிக்காலத்தில் சிவப்பு சிவப்பாய் இலைகள் மாறுமே, அந்த மரத்தின் பெயர் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா! அந்த மரத்தின் பெயரென்ன, அந்த செடியின் பெயரென்ன என்று ஏதாவது கேட்டுக்கொண்டு…” என்று சலித்துக் கொண்டான்.

இப்போது உங்களிடம் ஒரு உண்மையை சொல்கிறேன். அந்த மரத்தின் பெயர் ‘மேப்பிள்’ (Maple) என்பது எனக்குத் தெரியும்! தெரிந்துக் கொண்டுதான், அந்த பெண்ணிடம் பேசவேண்டும் என்பதற்காகதான் சும்மா அப்படி ஒரு கேள்வியை கேட்டேன்! கனடா நாட்டு தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் இலை, இந்த மேப்பிள் மரத்தின் இலைதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *