செய்திகள்

அந்தியூரில் 1,437 பயனாளிகளுக்கு உதவித்தொகை: அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஈரோடு, செப். 16

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் முன்னிலையில், அமைச்சர் கே.சி.கருப்பணன் 1,437 பயனாளிகளுக்கு உதவித்தொகை உட்பட ரூ.11.16 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது,

பர்கூரின் மேற்கு மலைப்பகுதிக்கு செல்ல மினி பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வாழும் மக்கள் எளிதாக மின் கட்டணத்தை செலுத்த ஏதுவாக மின்கட்டணம் செலுத்தும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குளம் முதல் குட்டையூர் வரை சாலை வசதிகள் மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலம்பட்டி சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேலும், சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற அடிப்படை வசதிகள் அனைத்து பர்கூர் ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து, பர்கூர் ஊராட்சி மலைப்பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அந்தியூர் கிளையில் ஓய்வூதிய தொகை பெறும் 1,273 பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ச.சுப்பிரமணியன், முதன்மை வருவாய் அலுவலர் அ.அழகிரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *