சிறுகதை

அந்தக் காகித வரிகள் – மு.வெ.சம்பத்

ராமய்யன் அந்தத் தெருவின் கடைசியில் உள்ள சின்னக் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மண்பாண்டங்கள், களிமண் பொம்மைகள் செய்து பிழைப்பை நடத்தி வந்தான். அந்தத் தெருவின் நடுவில் பிரம்மாண்டமாக மாளிகை போன்று கட்டப்பட்டிருந்த வீட்டில் வசித்து வரும் பணக்காரர் கந்தசாமி தினமும் வாகனத்தில் ராமய்யன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது ராமய்யனை ஏளனமாக பார்த்து விட்டுச் செல்வார். முதலில் இந்தக் குடிசை வீட்டை அகற்ற முன் வரவேண்டுமென மனதில் நினைப்பார்.

ராமய்யன் காலையிலிருந்து ஏதும் வியாபாரம் ஆகாததால் துவண்டு இருந்தான். அன்றும் அதே மாதிரி கந்தசாமி பார்த்து விட்டு செல்கையில் ராமய்யனுக்கு நமது குடிசையையும் நமது வியாபாரத்தையும் ஏளனமாக நினைக்கிறார், அத்தோடு என்னைக்கு இவன் வாழ்க்கையில் முன்னேறுவான் என்ற ஒரு எண்ணமும் அவருக்கு மனதில் ஓடிக் கொண்டிருப்பதையும் அவனால் ஊகிக்க முடிந்தது.

அப்பொழுது எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த சில வாசகங்கள் எழுதிய ஒரு காகிதம் ராமய்யன் பக்கத்தில் வந்து விழுந்தது. அதிலுள்ள வாசகங்களை இரண்டு மூன்று தடவை படித்த ராமய்யன் அதை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டான்.

மறு நாள் பணக்காரர் கந்தசாமி வரும்போது, ராமய்யன் அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு மண்பாண்டப் பொருட்கள் தேவை என்றால் கூறுங்கள். சிறப்பாகச் செய்து தருகிறேன் என்றான். அவர் ஒரு நமட்டுச் சிரிப்புடன் தலையை சற்று உயர்த்தி ஏளனமாகப் பார்த்து விட்டு ஏதும் கூறாமல் சென்றார்.

பறவைகள் தனது சிறகுகளையே நம்புவது போன்று ராமய்யன் தனது தொழிலையே பரிபூரணமாக நம்பியிருந்தான். சற்று நிதானம் தேவை என்பதை உணர்ந்தான்.

மறுநாள் வீட்டின் வாசலில் தெருவுக்கு இடைஞ்சல் இல்லாமல் சிறு சிறு குவளைகள், டம்ளர்கள், பூச்செடி வைக்கும் தொட்டிகள், சிறிய குடங்கள், சிறிய பானைகள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை கணிமண்ணால் செய்து அதற்கு ரம்மியமான வண்ணங்கள் பூசி பொது மக்கள் பார்வைக்காக வைத்தான்.

முதல் நாள் ராமய்யன் வீட்டில் பொருட்களைப் பார்த்தவர்கள் அவற்றைப் பற்றி பேசிக் கொண்டே சென்றனர். அடுத்தடுத்த நாட்களில் பொருட்களின் விலையைப் பற்றி கேட்டனர். ஒரு சில பேர் வாங்க ஆரம்பித்ததும் நாட்கள் நகர நகர வியாபாரம் சூடு பிடித்தது. எல்லா விழாக்கள் மற்றும் மக்கள் தேவைக்கு ராமய்யனிடம் பொருட்களை நிறையவே வாங்கினர்.

இன்று என்றும் போல் அந்த வழியாகச் செல்லும் பணக்காரர் இறங்கி வந்து ராமய்யனிடம் பரவாயில்லையே, நல்ல தந்திரமாக வியாபாரம் செய்கின்றாயே என்றார். ஏளனமான பார்வை கரைந்தோடி அவரிடம் நல்ல பார்வை தெரிவதை ராமய்யன் உணர்ந்தான்.

சில நாட்களில் ராமய்யனின் குடிசை வீடு மாடி வீடானது. அப்பொழுது வீட்டிற்கு வந்த பணக்காரர் ராமய்யனிடம் எவ்வாறு இந்த அளவில் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது என கேட்க ராமய்யன்காற்றில் வந்த காகித்தை அவர் கையில் கொடுத்தான்.

‘உங்களை ஏளனமாகப் பார்ப்பவரைப் பார்த்து ஓடி ஒளியாமல் அடிக்கடி அவர்களைச் சந்தியுங்கள். அப்போது தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் அதிகரிக்கும்’ என்ற வாசகங்கள் தான் அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது. இதைப் படித்து விட்டு கந்தசாமி ராமய்யனனை நோக்க, ராமய்யன் நாசுக்காக நீங்கள் என்னைப் பார்த்த பார்வை தான் எனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடி கோலியது என்றதும் கந்தசாமி அவனைக் கட்டிப் பிடித்து விட்டு எங்களது கிராம விழாவிற்கு நீங்கள் தான் எல்லாம் செய்து தர வேண்டும் என்று கூறி விட்டு காகித வாசகத்தால் உயர்ந்த ராமய்யன் எல்லோருக்கும் ஓர் உதாரணம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *