சிறுகதை

அந்தக் கடிதங்கள்- மு.வெ.சம்பத்

பெரிய ஊருக்கு அடுத்த அந்தச் சிறிய ஊரில் உள்ள எல்லா நிலங்களையும் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் வாங்கி மேம்படுத்தி நல்ல அழகான கட்டிடங்கள் கட்டி எல்லா வசதியும் அமைந்ததாகவே அமைத்திருந்தனர். வியாபாரம் . ஊர் மேம்பாடு, விவசாயம், கல்வி வசதி, நீர் மேலாண்மை, பேருந்து மற்றும் புகைவண்டி வசதி, வங்கிகள், தபால் நிலையம் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றிருக்கும்படி செய்திருந்தனர்.

ஒரு கட்டுப்பாடு ஒன்று அந்த ஊரில் நடைமுறையில் இருந்தது. அதாவது யாரும் வேலையில்லாமல் வெட்டிப் பொழுதைப் போக்கக் கூடாது என்பது மட்டுமின்றி ஏதாவது வேலை செய்து பணம் ஈட்டவேண்டும். குடும்பம் மற்றும் ஊர் மேம்பாட்டை நோக்கிய வண்ணமே எல்லோரது சிந்தனையாக இருக்கணும் என்பது அந்த ஊரின் தாரக மந்திரமாக இருந்தது. ஊரின் தலைவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனாவசியமாக அடுத்தவர் விஷயத்தில் தலையிடக்கூடாது, புறம் பேசக்கூடாது. ஆபத்தென்றால் உடனே உதவ வேண்டும். விளைந்த பொருட்களுக்கு நியாயமான விலை, பதுக்கலை அறவே ஒழிப்பு, கோடை காலத்துக்கு வேண்டிய நீரை அவரவர்கள் முடிந்த அளவு சேமித்தல் போன்ற கட்டுப்பாடுகளைத் தங்களுக்குள் விதித்துக் கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள்.

ஊருக்கு வெளியே கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கலைக் கல்லூரியும் மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பொறியியல் கல்லூரியும் அமைந்திருந்தது.

அன்று கல்லூரிக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் வந்து ஊர்த் தலைவர் மகன் பேருந்து வரவில்லையா ? நான் எனது வாகனத்தில் கல்லூரியில் கொண்டு சேர்க்கலாமா என்று கேட்க அவர்கள் மறுத்து விட அவன் சற்று நேரம் நின்று – பின் அவள் வந்ததைக் கண்டவுடன் விருட்டென்று அந்த இடத்தை விட்டுப் பறந்தான்.

வீட்டிற்கு வந்த மீனா, தான் வென்ற கோப்பையை தனது அப்பா விஜய்யிடம் தந்தாள். அப்பா… இன்னும் சில நாட்களுக்குள் நான் விளையாட்டை நிறுத்தி விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; ஏனென்றால் பரீட்சை நெருங்குகிறது என்றாள்.

சரி என்று சொன்னார் விஜய்.

அன்று ஊர்த் தலைவர் முத்து வீட்டிற்கு அவர் பெயர் போட்டு ஒரு கடிதம் வந்தது. அதில் அனுப்புனர் விலாசம் இல்லாதது கண்டு சற்று யோசித்த தலைவர் முத்து பின் கடிதத்தைப் படித்தார். அதில் உங்கள் மகன் ராமு படிப்பில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் அவன் மனம் சிதறி விடும் என்றும் முதலாம் ஆண்டு பரீட்சையில் இரண்டு பாடங்களில் தேர்வாக வில்லை. முயன்று படிக்கச் சொல்லுங்கள். நான் உதவுகிறேன் என்று எழுதியிருந்தது. இதைப் படித்ததும் முத்து முதலில் இதை யார் எழுதியது என்று கண்டு பிடித்தேயாக வேண்டுமன நினைத்தார். ராமு அவன் அப்பாவிடம் இதை ஆராய ஆரம்பித்தால் நமது சங்கதி வெளியே தெரிந்து விடும். நமக்குத் தானே அசிங்கம். ஏதோ உதவி செய்வதாகத்தானே கூறியுள்ளது. கடிதத்தில். நான் அதை உபயோகப்படுத்திக் கொண்டு தேர்வாகி விடுகிறேன் என்றான்.

பின் இரண்டு நாட்களில் அடுத்த தபாலில் இவனுக்கு புரியாத பாடங்கள் விளக்கங்களுடன் வந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தான்.

அவனுக்கு மேற்கொண்டு சந்தேகங்கள் வந்தால் எங்கு கேட்பது என்று தெரியாமல் திணறினான். அடுத்தடுத்த வருடங்களில் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டான். தபால்களில் வந்து உதவியவரை இப்போது தேட வேண்டுமென தீர்மானித்தான்.

பரீட்சை முடிந்து நல்லபடியாக படிப்பை முடித்த ராமுவுடன் ஊர்த் தலைவர் முத்து தனது உறவினர் விஜய் வீட்டிற்கு வந்தார். வந்தவர் விஜய்யிடம் தனது இரண்டாவது பையன் ராமு நல்ல முறையில் படிப்பை முடித்துள்ளான் என்றும் அந்தக் கடித செய்தியையும் கூறி அது யார் செய்தார் என அறிந்தே ஆக வேண்டிய நிலையில் பையன் ராமுவும் நானும் இருப்பதாகக் கூறினார்.

விஜய் ஒரு சின்ன புன்னகையைச் சிந்தி விட்டு ஆச்சரியமாகவே உள்ளது. யாரோ வேண்டியவர்கள் தான் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன் என்றார். அப்போது அங்கே வந்த மீனா எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு ராமுவை பேருந்து நிறுத்தத்தில் பார்த்ததைச் சொன்னாள்.

பின் அவன் படிப்பு கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக நான் தான் என்னுடைய பிரண்டு இவன் படிக்கும் கல்லூரியில் தான் படிக்கிறாள். அவளும் இவன் மாதிரியே இரண்டு பாடத்தில் பெயிலாகி இருந்தாள். நான் தயாரித்து கொடுக்கும் பாடங்களின் கேள்வி மற்றும் பதிலை அவளுக்கு அனுப்பினேன். அதன் நகலை அனுப்பியவர் பெயரிடாமல் உங்களுக்கு அனுப்புமாறு அவளிடம் சொன்னேன். நல்ல வேளை எனது உழைப்பு இருவருக்கும் பயன்பட்டது குறித்து மகிழ்ச்சி என்றாள்.

முத்து எவ்வாறு பிரதிபலன் செய்யப் போகிறேனோ என்று கூற….

ராமு , ‘‘அக்கா ரொம்ப நன்றி என்னை மனிதனாக்கியதற்கு’’ என்றான் .

விஜய் என்னவோ எல்லாம் நடந்திருக்கே என்று கூற…

அங்கே மகிழ்வலை மணம் கமழ்ந்தது.

அப்போது முத்து விஜய்யிடம் என் மகன் வாழ்வில் விளக்கேற்றிய மீனா, வெளி நாட்டில் இருக்கும் எனது பெரிய மகனை மணந்து என் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். ராமு உங்களது இரண்டாவது மகளை மணந்து கொண்டு உங்கள் இரண்டாவது மகள், சாரி எனது இரண்டாவது மருமகள் எனது கம்பெனிப் பொறுப்பையும் ராமு நிலம் மற்றும் வீடுகள் இவற்றை பராமரிப்பு பார்த்தாலே போதும்; நான் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வேன். சம்மதமா என முத்து விஜய்யிடம் கேட்க விஜய் காட்டில் தேனடை எடுக்கச் செல்பவனுக்கு தேனடை தானாகவே அவன் கையில் விழுந்தது போலிருந்தது. அப்போது விஜய் தனது மனைவி மற்றும் மகள்களைப் பார்த்தபோது அவர்கள் பூரிப்பில் கண்களால் சம்மதம் தெரிவித்தனர்.

முத்து இரண்டு மகன்களைத் திருமணம் செய்து கொள்ள புத்திசாலியான மருமகள்கள் கிடைத்தார்கள், உறவின் பாலம் தொடர்கிறது என்று கூறி ராமுவுடன் விடைபெற தயாரானார்.

அப்போது ராமு மீனாவை நோக்கி மரியாதைச் சொல்லாக மூத்த அக்காவாக உங்களை அழைத்த நான் இனிமேல் அண்ணி என்று அழைக்கப் போகிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறி விடைபெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.