சிறுகதை

அத்தைமகள் | மலர்மதி

“திவாகர்… நாம இப்படியேவா காலம் தள்ளப் போறோம்?” ஐஸ்கிரீமைச் சுவைத்துக் கொண்டே அருணா கேட்டாள்.

அவள் மடியில் படுத்திருந்த திவாகர் ‘சரே’லென எழுந்து அமர்ந்தான்.

“இப்ப நம்ம லைஃப் ஜாலியாத்தானே ஓடிக்கிட்டிருக்கு? இதுக்கு என்ன குறை?” என்று கேட்டான்.

“என்ன குறையா? நான் கேக்கறதையெல்லாம் வாங்கித் தர்றீங்க. நான் மறுக்கலை. இதோ இப்ப நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற இந்த ஐஸ்கிரீம் கூட நீங்க வாங்கிக் கொடுத்ததுதான்.

ஆனால், காசு யாருடையது?”

“அதைக் கேக்கறியா? என் அப்பாவோட காசுதான்.”

“அது உங்க சொந்தக் காசா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன்.”

“அருணா… என்ன நீ … என் பணம், என் அப்பா பணம்னு பிரிச்சுப் பேசறே? என் அப்பாவுக்குச் சொந்தமான எல்லா சொத்தும் எனக்குத் தானே சொந்தம்?”

“சொத்துங்கறது வேற திவாகர். இப்படி நீங்க படிச்சுட்டு சும்மா இருக்கலாமா? உங்களுக்குன்னு ஒரு வேலை, ஒரு உத்தியோகம்னு இருந்தாத்தானே உங்க குடும்பத்தை…அதாவது நம்ப குடும்பத்தை நீங்க நல்லா நடத்த முடியும்? இன்னும் எத்தனை நாளுக்கு உங்க அப்பா தயவுல இருக்கப் போறீங்க?”

“ஒருவேலை எனக்குன்னு கிடைக்காமலா போகும்? அதுவரை என் அப்பா கொடுத்தால் என்ன?”

“இல்லை திவாகர், எந்தப் பெண்ணும் எதையும் கணவனின் சொந்த உழைப்பில் கிடைக்கும் பணத்தில் வாங்குவதைத்தான் விரும்புவாள். இன்னிக்கில்லேன்னாலும் நாளைக்கு நம் திருமணம் நிச்சயமா நடக்கத்தான் போகுது. அதுக்கு முன் நீங்க ஒரு நல்ல உத்தியோகத்துல இருந்தீங்கன்னா எவ்வளவு நல்லா இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பிளீஸ்…”

“சரி, சரி… இப்போதைக்கு நம்ம மூடைக் கெடுத்துக் கொள்ள வேணாம். சீக்கிரமா சாப்பிடு, படத்துக்கு நேரமாகுது.” என பரபரத்தான் திவாகர்.

ஒருவாரம் ஓடியது.

வழக்கம் போல் ஊர்சுற்றிவிட்டு வீடுதிரும்பினான் திவாகர்.

*

அலைபேசி இசைபாட, எடுத்துப் பார்த்தான்.

குறுஞ்செய்தி.

அத்தை மகள் அருணாதான் அனுப்பியிருந்தாள்.

“அடுத்தவாரம் என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.” என்பதுதான் அந்தச் செய்தி.

தீமிதித்தவன் போல் ஆனான்.

‘அருணா எனக்குத்தானே சொந்தம்? ஆண்டாண்டு காலமாக நான் காத்திருக்க,எங்கிருந்தோ வந்து எவனோ ஒருத்தன் கொத்திக் கொண்டு போவதா? கூடாது. இதைநான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்.’

வெகுண்டெழுந்தான்.

“அப்பா…” என்று அவன் கூவியதில் வீடே கிடுகிடுத்தது.

“என்னடா, ஏண்டா இப்படிக் கத்தறே?” என்றவாறு அறையிலிருந்து வெளிப்பட்டார் அப்பா அழகேசன்.

“அருணா யாருக்குப்பா சொந்தம்?”

“முறையா பார்த்தா உனக்குத்தான்.”

“அப்ப, யாரோ ஒருத்தன் எதுக்கு அவளைப் பெண் பார்க்க வரணும்? அதெப்படி அவங்க பெற்றோர் அதுக்கு சம்மதிக்கலாம்?” என்று உறுமினான் திவாகர்.

“ஓ.. இதுதான் விஷயமா?” என்றவர், “அருணாவோட அம்மா என்கிட்ட அனுமதி வாங்கித்தான் இதை ஏற்பாடு செஞ்சிருக்கா.” என்றார் அழகேசன்.

“நீங்க எப்படிச் சம்மதிக்கலாம்?”

“இதோ பார் திவாகர். அருணாவோட அம்மா என் சொந்தத் தங்கச்சியா இருந்தாலும் அவளோட பொண்ணு வாழ்க்கைய அவதானே தீர்மானிக்கணும்? அருணாவைப் பொண்ணு பார்க்க வரப் போற பையன் பேங்கில் கைநிறைய சம்பளத்தில் இருக்கிற ஒருநல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனை விட்டுவிட்டு வேலைவெட்டி எதுவும் இல்லாமல் தண்டச்சோறு தின்னுட்டு ஊர்சுத்தற உனக்கு எப்படிக் கொடுப்பாள்?”

“இன்னைக்கில்லேன்னாலும் நாளைக்கு எனக்கு வேலை கிடைக்காமலா போகும்?”

“இப்படி சொல்லிச் சொல்லியே பல ஆண்டுகளக் கடத்திட்ட. காலா காலத்துல அருணாவைக் கட்டிக் கொடுக்கணுங்கறது அவங்கப் பெற்றோருடைய விருப்பம். ஆயிரம்தான் இருந்தாலும் அவங்க பெண்ணைப் பெத்தவங்க. இப்படி நீண்டநாளெல்லாம் காத்திருக்க மாட்டாங்க. நீயும் கொஞ்சங் கூட அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் நண்பர்களோடு வெட்டியா ஊர்சுத்திக்கிட்டுத் திரியறே. அதனால்தான் நான் சரின்னு சொல்லிட்டேன்.”

“அப்பா… உடனே பெண் பார்க்கும் படலத்தைத் தடுத்து நிறுத்துங்கப்பா.”

“எதைச் சொல்லிடா நிறுத்தறது?”

“இன்னும் மூன்றேமாதம் டைம்குடுக்கச் சொல்லுங்க. அதுக்குள்ளாற நான் ஒருவேலையைத் தேடிக்கலைன்னா, அவங்க விருப்பம் போல் வேறுயாருக்காவது அருணாவைக் கட்டிக்கொடுக்கச் சொல்லுங்க.”

“சரி,

நான் பேசிப் பார்க்கிறேன்.” என்று அழகேசன் சொன்னபிறகுதான் அந்தஇடத்தை விட்டு அகன்றான் திவாகர்.

சொன்னதுபோல் இரண்டேமாதங்களில் திவாகருக்கு ஒருவேலை கிடைத்தது.

தனியார் நிறுவனம்தான். என்றாலும், பி.காம்., படித்திருக்கும் அவனுக்கு அக்கௌண்ட் பிரிவில் ஆபீசர் உத்தியோகம். வருங்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பிருந்தது.

முதல் மாதச் சம்பளத்தை முழுசாகக் கொண்டுவந்து அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினான். அம்மாவும் மகனை மனதார வாழ்த்தினாள்.

ஒருநல்ல சுபதினத்தில் திவாகர்-அருணா திருமண நிச்சயதார்த்தம் அமர்க்களமாக நடந்தது.

விருந்து முடிந்தபிறகு ஹாலில்அமர்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“தங்கச்சி.. கடைசியில் நீதாம்மா ஜெயிச்சே.” என்றார் அழகேசன்.

“பின்னே என்னண்ணா? எத்தனை நாளைக்கி நானும் பொறுத்துப் பார்க்கிறது?” என்றாள் அழகேசனின் தங்கை அமுதா.

“நான் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தேம்மா. கொஞ்சங் கூட இவன் காதில் வாங்கிக்கலை. கடைசியில் நீபோட்ட குண்டுதாம்மா வேலை செஞ்சது.” என்றார் அழகேசன்.

குழம்பிப் போன திவாகர் செவிகளை கூர்மையாக்கினான்.

“இந்தக் காலத்துப் பசங்களுக்கு எதைச் சொன்னாலும் மண்டையில ஏறாது அண்ணா. தனக்குச் சொந்தமானவளை வேறு எவனாவது ‘கட்டப்போறான்’னு தெரிஞ்சா அவ்வளவுத்தான், விடமாட்டாங்க…” என்று அமுதா சொல்ல, கூடியிருந்த அனைவரும் சிரிக்க….

திவாகர் அசடுவழிய வீடே கலகலத்துப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *