செய்திகள்

அத்திவரதர் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பெண்ணுக்கு குழந்தை

காஞ்சிபுரம், ஆக. 14–

அத்திவரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த கர்ப்பிணிக்குக் குழந்தை பிறந்துள்ளது அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது நடைபெற்று வருகிறது. வைபவத்தின் 45ஆம் நாளான இன்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மாலை அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். இன்னும் இரண்டு தினங்களே தரிசனம் நடைபெற உள்ள நிலையில் காஞ்சியில் கூட்டம் அலைகடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் இன்று கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்துத் திரும்பிய கர்ப்பிணி விஜயாவுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான சிறப்பு வரிசையில் நின்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக கோயில் அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கௌதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் அப்பெண்ணுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அவருக்கு மூன்று கிலோ எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *