செய்திகள் போஸ்டர் செய்தி

அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி

நோய் கட்டுப்பாடு பகுதி தவிர சென்னையில் தளர்வுகள்

* கட்டுமான பணிக்கு அனுமதி * 25 சதவிகித

பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்

* 10% ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள்

இரவு 9 மணி வரை உணவகத்தில் பார்சல்

அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி

மொபைல், வீட்டு உபயோக பொருள், ஹார்டுவேர், மின்சார பொருள் விற்பனை கடைகளுக்கு தடை இல்லை

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, மே.3–

சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர இதர இடங்களில் பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக, கடந்த 27.4.2020 அன்று, பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தின் அடிப்படையிலும்; மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும்; 29.4.2020 அன்று நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்; மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.4.2020 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், 1.5.2020 அன்று நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின்படியும், 1.5.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், 2.5.2020 அன்று எனது தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படியும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது:-

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் முழு ஊரடங்கு

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர):

* கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

10 சதவிகித ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள்

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள்

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.

இரவு 9 மணி வரை உணவகம்

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

* அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *