போஸ்டர் செய்தி

அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல்

கோவை, பிப்.6–
கோவை வையம்பாளையத்தில் இன்று நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அத்திகடவு அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
கோவையை அடுத்து செங்காலிபாளையத்தை சேர்ந்த விவசாயப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு, 1957ல் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட 16 மணிநேர மின்சாரம், 4 மணி நேரமாக குறைக்கப்பட்டதை எதிர்த்து, விவசாயிகளை ஒன்று திரட்டி கோவை பகுதியில் போராட்டம் நடத்தியதோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் துறை அமைச்சரை சந்தித்து விவசாயிகளின் துன்பத்தை விளக்கி, மீண்டும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேர மின்சாரத்தை பாசனத்துக்கு பெற்றுத் தந்தது அய்யா நாராயணசாமி நாயுடு.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் அமைப்பாக 1966ம் ஆண்டு கோவை வடக்கு தாலுக்கா விவசாயிகள் சங்கம் என்ற ஒரு சங்கம் வேலப்பனை தலைவராகவும், நாராயணசாமி நாயுடுவை செயலாளராகவும் கொண்டு துவக்கப்பட்டது. பின்னர் இது கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக 1967–ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு விதை ஊன்றப்பட்ட விவசாயிகள் சங்கம், 1973–ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாக மலர்ந்து, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை பெற்றுத் தந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அய்யா நாராயணசாமி நாயுடு 1984ம் ஆண்டு அவர் மறையும் வரை தொடர்ந்து அச்சங்கத்தின் தலைவராகவே இருந்தார்.
விவசாயிகளின்
ஒப்பற்ற தலைவர்
விவசாயிகளின் நலனைக் காக்க அவர் நடத்திய போராட்டத்தின் காரணமாக அரசு மின் கட்டணத்தைக் குறைத்தது. நாராயணசாமி நாயுடுவின் பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, வாதத் திறமை, விவசாயிகளை ஒருங்கிணைத்தல் போன்ற ஆற்றல்களால், விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக அவர் விளங்கினார்.
இவர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் உழவர்களை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உழவர் இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. அய்யா நாராயணசாமி நாயுடு ஆற்றிய பணிகளுக்காக அவரை கௌரவிக்கும் விதத்தில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடுவுக்கு கோவையிலுள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், 1970ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல்வேறு விவசாயிகள் போராட்டங்களின்போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அம்மா அறிவித்தார்.
ஜெயலலிதா
வாக்குறுதி நிறைவேற்றம்
அம்மா தான் தேர்தல் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடுவின் நினைவை போற்றும் வகையிலும் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார். மேலும் 1970 முதல் 1980 வரை பல்வேறு விவசாயப் போராட்டங்களில் உயிர் நீத்த 40 விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் உத்தரவிட்டார். இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தலைவி அம்மா.
அம்மாவின் ஆணையின்படி 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் நிலத்தில் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட மணி மண்டபத்தை ஒரு விவசாயி ஆகிய நான் இன்று திறந்து வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
உழவர் பாதுகாப்பு திட்டம்
‘‘அன்னமிட்ட கை, நம்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழ வைத்து” என்று புரட்சித் தலைவர் தனது பாடலின் மூலம் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் வழிவந்த அம்மாவின் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு விவசாயிகளுக்கு அரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அம்மாவினுடைய அரசு.
விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வேளாண்மைத் துறையில் அம்மாவின் அரசின் சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.
தமிழகம் முதலிடம்
* பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டிலே மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2016–17ம் ஆண்டில் அதிக அளவிலான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றதில், இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு வகிக்கிறது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அதாவது, கடந்த 2016–17ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து 3 ஆயிரத்து 526 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை ஒப்பளிக்கப்பட்டு, வேளாண் பெருமக்களுக்கு இழப்பீட்டத் தொகையாக வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு.
* 2018–19ம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.
இரண்டாம் பசுமை புரட்சி
* இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்து சாதனை புரிந்து, இந்திய அரசின் உயர் விருதான கிருஷி கர்மான் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.
* கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவிக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2 லட்சம் சிறு, குறு, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணையத் திட்டம் அம்மாவினுடைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரத்தை பெறுவதற்கு அம்மா காவேரி பிரச்சனையில் நடத்திய சட்டப் போராட்டத்தில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, காவேரியில் உள்ள தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை இதன் மூலம் நிலைநாட்டிய அரசு அம்மாவினுடைய அரசு.
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக இந்த நிதியாண்டில் 31.1.2019 வரை 10 லட்சத்து 12 ஆயிரத்து 796 விவசாயிகளுக்கு 6 ஆயிரத்து 648 கோடியே 35 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தென்னை விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் வகையில் தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அம்மாவின் அரசால் அனுமதி வழங்கப்பட்டு, அவர்களின் வருமானம் இருமடங்காக இன்றைக்கு அம்மாவினுடைய அரசால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்திக்கடவு – அவிநாசி
திட்டத்துக்கு அடிக்கல்
* 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க, முழுக்க மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
* உடலுக்கு உயிர் முக்கியம் என்பது போல, விவசாயிகளுக்கு நீர் முக்கியம். விவசாயத்திற்குத் தேவையான நீர், குடிப்பதற்குத் தேவையான நீரை உருவாக்குவதே அம்மாவினுடைய அரசின் தலையாய கடமையாகக் கருதி, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டுவந்து, விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் எல்லாம் ஆழப்படுத்தப்பட்டு பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும், இவ்வாறு ஆழப்படுத்துவதன் மூலமாக கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் என்று அறிவித்ததன் அடிப்படையில், விவசாயிகளின் நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம். இந்தத் திட்டத்தை தமிழகத்திலே அம்மாவின் அரசு தான் கொண்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* அத்திக்கடவு அவினாசி திட்டத்தை துவங்குகின்ற பொழுது சில பகுதிகள் விடுபட்டிருக்கின்றன. நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மேலும் அந்த விடுபட்ட பகுதி, பகுதி–2 திட்டத்தின் மூலமாக அண்ணூர் மேற்கு பகுதி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர் உயர, இந்தத் திட்டத்திற்கும் அம்மாவின் அரசால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
* மேட்டூர் அணையில் நீர்வரத்து குறையும்போது டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக குறுவை தொகுப்புத் திட்டம் மற்றும் சம்பா தொகுப்புத் திட்டத்தை அம்மாவினுடைய அரசுதான் அறிவித்தது.
விவசாயிகளுக்கு
முழு மானியம்
* 2011ம் ஆண்டு முதல் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவி அளிக்கப்பட்டு வருகிறது.
* வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெற செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.
* சாகுபடி பரப்பினை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், விதைகள், உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பாசன வசதி அளித்தல், மானிய விலையில் யந்திரங்கள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகளின் நலன் கருதி அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.
2007-ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பொழுது, அந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட மத்திய அரசு மறுத்தது. அம்மா உச்ச நீதிமன்றத்தை நாடி 2013–ல் அந்த உத்தரவை பெற்றார். அதற்காக தஞ்சையிலே விவசாயிகள் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார்கள். அப்பொழுது அம்மா கலந்து கொண்டு பேசுகிறபோது, காவிரி உரிமையை மத்திய அரசிதழில் வெளியிட்ட நாள் வாழ்நாளிலே பெற்ற மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டு, விவசாயிகளை பெருமைப்படுத்திய தலைவி அம்மா.
இன்று பொன்னாள்
நான் விவசாய குடும்பத்திலே பிறந்து வந்திருக்கின்றேன். இன்று உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்த நாள் எனது வாழ்நாளில் ஒரு பொன்னான நாளாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்கெங்கெல்லாம் நீர் இருக்கின்றதோ, அந்த நீரையெல்லாம் சேமித்து வைக்கும் அளவிற்கு இன்றைக்கு அம்மாவினுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற திறமையான நான்கு தலைமைப் பொறியாளர்களை நியமித்து கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிறது. அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்கு இருக்கும் நதிகள் மற்றும் ஓடைகளில் ஓடுகின்ற நீர் வீணாகக் கடலிலே கலக்கின்ற நீரையெல்லாம் அங்கே தடுப்பணைகள் கட்டி சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம்.
தடுப்பணைகள்
ஆகவே, இது மூன்றாண்டு திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 328 கோடி ரூபாய் ஒதுக்கி, நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டுகின்ற பணி துவக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு படிப்படியாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஓடைகள், நதிகள் குறுக்கே தடுப்பணை கட்டப்பட், நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயர்கின்ற சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு ஏற்படுத்தும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஒரு வரலாற்றுச் சாதனையான திட்டத்தை நாங்கள் இயற்றியிருக்கின்றோம். மத்திய அரசோடு தொடர்பு கொண்டு அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். கோதாவரி–காவிரி இணைப்பு நிச்சயம் அம்மாவினுடைய அரசு நிறைவேற்றித் தரும். ஆகவே, கோதாவரியில் உற்பத்தியாகின்ற நீர் கிட்டத்தட்ட 2500 டி.எம்.சி. தண்ணீர் கடலிலே கலந்து வீணாகிறது. அந்த வீணாகின்ற நீரை, தெலுங்கானா, ஆந்திரா மூலமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சுமார் 200 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. அது விரைந்து செயல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
கோதாவரி – காவிரி இணைப்பு
ஆகவே, நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடி வரும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஏனென்று சொன்னால், ஒவ்வொரு காலகட்டத்திலும் பருவமழை பொய்க்கின்றபொழுது, டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற நிலையை மாற்றி, அதுபோல 20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் தான் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. ஆகவே, பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் நடவு செய்கின்றபொழுது, தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடுகின்றது, நஷ்டம் ஏற்படுகின்றது. ஆனால், இந்த கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலமாக நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ரூ.2 ஆயிரம் கோடியில்
உணவு பூங்கா
அம்மாவினுடைய அரசு விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, இன்றைக்கு நவீன முறையில் விவசாயத் தொழிலை மேற்கொள்ள அம்மாவினுடைய அரசால் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, சந்தை ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை அங்கே விற்பனை செய்யலாம், ஆன்-லைனிலும் விற்பனை செய்யலாம். விளைபொருட்களுக்கு குறைந்த விலை வருகின்றபொழுது பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளும் கட்டித் தரப்பட்டுள்ளது.
விவசாய சந்தைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட காய்கறிகளையெல்லாம் ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மற்றும் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, சென்னைக்கு அருகில் ரூபாய் இரண்டாயிரம் கோடியில் உணவுப் பூங்கா ஒன்று, தனியார் பங்களிப்போடு அமைப்பதற்கு அம்மாவினுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்திற்கு தேவையான கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப்படுத்துவதற்கான பணி ஆய்வில் இருந்து கொண்டிருக்கிறது.
கால்நடை ஆராய்ச்சி மையம்
விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டு அமையவிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பல்வேறு வகையான பசுக்கள், ஆடுகள், கோழிகள், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகள் அறிந்துகொள்வதற்கும், விவசாயிகளுக்கு கூடுதலான விலை கிடைப்பதற்கும் இவ்வாராய்ச்சி மையம் பயன்படும் என்பதையும் இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மாவினுடைய அரசு விவசாயிகளின் அரசு; விவசாயிகளின் நலன் காக்கக்கூடிய அரசு. இரவு, பகல் பாராமல், வெயில், மழை என்றும் பாராமல் உழைக்கின்ற விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என இரண்டு பேரையும் காக்கின்ற அரசாக அம்மாவினுடைய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருங்காலத்தில் விவசாயத் தொழில் மிகச் சிறந்த தொழிலாக திகழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அம்மா அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா உலகப் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு மண்டபம் இங்கே திறக்கப்படும் என்று அறிவித்தபடி தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக, பிரம்மாண்டமான முறையில் கட்டி, உங்கள் அத்தனைபேரின், மேடையிலே வீற்றிருக்கின்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆசியோடு, ஆதரவோடு, விவசாயப் பெருமக்களுடைய நினைவைப் போற்றுகின்ற விதத்திலே மறைந்த அய்யாவுக்கு மரியாதை செலுத்துகின்ற விதமாக புகழ்சேர்க்கின்ற விதமாக மணிமண்டபம் திறந்ததிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உற்சாக வரவேற்பு
கோவை வையம்பாளையத்தில் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமான மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சாபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து கார் மூலம் வையம்பாளையம் வந்த முதல்வருக்கு விவசாயிகள் கரகோஷம் எழுப்பி மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். அதன் பின்னர், நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தும், அரசு நலத்திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார்.
அடிக்கல்
அரசு சட்டக்கல்லூரியில் ரூ.10.16 கோடியில் நூலகம் மற்றும் கலையரங்கம் கவுண்டம்பாளையத்தில் 3.55 கோடியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகம் 2.75 கோடி செலவில் எஸ்எஸ் குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி பேசினார்.
தொடர்ந்து, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். ஜெயலலிதாவின் அரசு எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்று முதல்வர் உறுதி அளித்தார். திரண்டிருந்த விவசாயிகள் நன்றி தெரிவித்து உற்சாக கோஷம் எழுப்பினர்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ், வி.கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர்கள் வேலுச்சாமி, தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *