மாதவன் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் மனைவி மல்லிகாவிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அதாவது இந்த வீட்டைக் கட்டி குடியேறி வரும் 10 ந்தேதியுடன் 24 வருடங்கள் பூர்த்தியாகி 25 வது வருடம் துவங்கவுள்ள நிலையில் அதை ஒரு சிறு விழாவாகக் கொண்டாடலாமா என வினவ மல்லிகா முழு மனதுடன் சம்மதம் கூற மேற்கொண்டு தனது திட்டத்தைக் கூறினான்.
நெருக்கமானவர்களை அழைத்து கேக் வெட்டி, வருபவர்களுக்கு ஒரு சிற்றுண்டி தந்து விழாவை கோலாகலமாக்கலாம் என்றான். மறு நாளிலிருந்து வீட்டை சுத்தப்படுத்தி வர்ணம் பூசி புதிய வீடாக மாற்றுவதிலேயே முனைப்பைக் காட்டினான்.
டிசம்பர் 10 ந்தேதி காலை பேக்கரிக்குச் சென்று கேக்குகளை தயார் பண்ண ஆர்டர் கொடுத்து விட்டு மாலையில் சிற்றுண்டி தயார் செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டான் மாதவன்.
மாலை 5.30 மணியளவிலிருந்து நெருக்கமானவர்கள் வருகை ஆரம்பமானது. வீடே விழாக் கோலம் பூண்டது. வந்தவர்கள் மாதவனிடம் புது வீட்டிற்கு வந்த உணர்வு தான் வருகிறது என்று ஒட்டு மொத்தமாகக் கூறினார்கள். ஹாலில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்தைப் பாராட்டாதவர்களே இல்லையெனச் சொல்லலாம். வந்தவர்கள் கேக் வெட்டும் விழாவில் பங்கு கொண்டு மகிழ்வுடன் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மனதாரப் பாராட்டி விட்டு வீட்டிற்கு 25 வருட விழா நிகழ்வுக்கு மாதவன் தான் முன்னோடியென்று ஒட்டு மொத்தமாகக் கூறி விட்டு விடை பெற்றனர்.
மாதவன் பின் பேக்கரிக்குச் சென்று கேக்குக்குரிய பணத்தை கொடுக்க எத்தனித்தான். அங்கு சற்று கூட்டம் இருந்ததாலும் கடைக்காரரிடம் நான்கு பேர் ஒரே நேரத்தில் பணத்தை நீட்டவும் கடைக்காரர் பரபரப்பாக செயல்பட்டு ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு பில்லைக் கொடுத்தார். நான் எனது முறை வந்ததும் 500 ரூபாய்த் தாளை நீட்டினேன். எனக்கு மீதம் தர வேண்டியதில் இரண்டு 100 ரூபாய் தாள்களும் இரண்டு 50 ரூபாய்த் தாள்களையும் தந்தார். கடைக்காரர் 50 ரூபாய் அதிகமாகக் கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்த நான், உள்ளுக்குள் ஒரு சபலம் ஏற்பட்டவனாய் தானாகக் கிடைத்த பணம் தானே ஏன் திருப்பித் தர வேண்டும். அவருக்கு லாபத்தில் நட்டம் தானே. இதெல்லாம் கூட்ட நேரத்தில் நடைபெறும் நிகழ்வு தானே என்று மனதில் கூறிக் கொண்டு ஒரு குதூகலத்துடன் மாதவன் அங்கிருந்து நகர்ந்தான்.
அடுத்து பூக்காரியிடம் அவருக்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து சுமார் பத்தடி தூரம் வந்ததும் சார்.. சார்..! என்று ஒருவர் இவரை அழைத்துக் கொண்டே வருவதை கண்ட மாதவன் வண்டியை நிறுத்தி விட்டு என்னவென்று கேட்பதற்குள்,
அவர் கையில் வைத்திருந்த 50 ரூபாய் தாளை நீட்டி உங்கள் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணம் சார்! பிடியுங்கள், அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படக்கூடாது என்பதை சின்ன வயது முதல் எனக்கு சொல்லிக் கொடுத்ததை இன்றளவும் கடைபிடிக்கிறேன் சார்!” என்றதும் யாரோ மாதவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போலத் தோன்ற ஒரு கணத்தில் 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டோமே என்று உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு அதே 50 ரூபாயை நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவுடன் வண்டியை பேக்கரி நோக்கி கடைக்காரரிடம் கொடுக்க விரைந்த நேரத்தில் அதே 50 ரூபாய் இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் என எக்காலமாய் சிரிக்க,.
வண்டியை திட மனதுடன் பேக்கரி நோக்கி செலுத்தினான் அந்த 50 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க .