சிறுகதை

அது வேறு இது வேறு – ராஜா செல்லமுத்து

எப்போதும் மனைவி மாலதியைத் திட்டிக்கொண்டே இருப்பான் கணவன் கிருஷ்ணன்.

காலை, மாலை என்ற கணக்கு வழக்கு என்பதெல்லாம் கிடையாது அவனுக்கு. இங்கே யார் மீது கோபம் என்றாலும் மனைவி தான் அவனுக்கு அதை இறக்கி வைக்கும் பாரம்.

அதனால் கணவன் கோபமாக இருக்கிறானா? அல்லது நன்றாக இருக்கிறானா? என்று மாலதி அடிக்கடி பார்த்துக் கொள்வாள். இல்லை என்றால் தினமும் ஆராதனை; ஆராதனை நடந்து கொண்டே இருக்கும் .

ஓர் அதிகாலை சூரியன் கூட புலராத ஒரு காலையில் மனைவியை கண்டபடி திட்டி கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

நீ எல்லாம் எதற்காக இருக்கே உதவாக்கரை; தண்டம், முண்டம் திருடி என்று வாய்க்கு வராத வார்த்தைகள் எல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தான்

சில நேரங்களில் பதில் சொல்வாள் அல்லது அமைதியாகவே இருந்து விடுவாள் மாலதி.

அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கார்த்திக்கு அது ரொம்பவும் தொந்தரவாக இருந்தது.

என்ன மனுஷன் இவர். எப்பப் பார்த்தாலும் மனைவிய திட்டிட்டே இருக்காரு. அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா ?அதுக்குன்னு காலையில விடியறதுக்குள்ளவா சண்டை போடுவாங்க. இது தவறு என்று கிருஷ்ணனை மனதிற்குள்ளே கட்டிக் கொள்வான் கார்த்திக்.

கிருஷ்ணனுக்கும் கார்த்திக்கும் நெருங்கிய உறவு இருந்தாலும் அதை இவர்கள் போடும் சண்டையை விலக்கி விடுவதோ அல்லது ஞாயம் சொல்வது அவன் செய்ய மாட்டான்.

அது குடும்பச் சண்டை. புருஷன் பொண்டாட்டி எப்ப வேணாலும் சேர்ந்துக்குவாங்க. நாம போயி ஞாயம் சொல்லப் போனா நாம குற்றவாளியாகிருவோம் ; அவங்க நிரபராதி ஆயிடுவாங்க. அதனால நம்ம எதுவும் பேசக்கூடாது என்று எவ்வளவு சண்டை போட்டாலும் அத்தனையும் பார்த்துக் கொண்டே இருப்பான் கார்த்திக்.

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும் சண்டை அர்ச்சனை நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஒரு நாள் கிருஷ்ணனைப் பார்த்து கேட்டான் கார்த்தி.

ஏன் சார் நீங்க எப்பவும் வீட்டில் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க எதுக்கு? என்று கேட்டான்.

இல்லப்பா என் பொண்டாட்டி சரியில்லை .சரியா இருக்க மாட்டேங்கிறா. வீடு சுத்தப்படுத்தல எல்லாத்தையும் நானே செய்ய வேண்டி இருக்கு.அதுதான் நான் திட்டுறேன. சாப்பிட வேண்டியது தூங்க வேண்டியது .இது மட்டும் தான் அவளுடைய வேலையா இருக்கு என்று கிருஷ்ணன் அவன் பக்கம் உள்ள நியாயத்தை சொல்லிக் கொண்டான்.

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு விளங்காமல் இருந்தது. கணவன் மனைவி இரண்டு பேரும் எவ்வளவுதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல ஒருவருக்கொருவர் குழந்தையாக பேசிக்கொள்வார்கள் . சிரித்துக் கொள்வார்கள். இதை பார்க்கும் கார்த்திக்கு சுர்ரென்று கோபம் வரும்.

நல்ல வேளை நாம இவங்கள இந்த சண்டையை விலக்கி விடல. அவங்க கூட போயி நாம ஞாயம் பேசி இருந்தமுன்னா . நாம தான் குற்றவாளியாகிருப்பம் . எப்படி சிரிச்சிட்டு இருக்காங்க; கடுமையாக சண்டை போட்டு வந்தாங்க. இன்னிக்கு இவ்வளவு ஃபிரண்டா மாறி இருக்கிறார்களே என்று கார்த்திக் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் ஏதோ ஒரு விஷயத்திற்காக கார்த்திக் கிருஷ்ணனுடன் கொஞ்சம் கோபமாக நடந்து கொண்டான்.

இது கிருஷ்ணனுக்கு என்ன வலியைத் தந்ததோ தெரியவில்லை. அன்றிலிருந்து அவர் கார்த்திக்கிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை . சரியாக சிரிப்பதும் இல்லை . இதனால் கார்த்திக்கு மனதில் ஒரு காயம் ஏற்பட்டது.

என்ன இது மனைவி கூட மட்டும் ராத்திரி பகல்னு பார்க்காம சண்ட போடுறவர்கள் . உடனே பேசிக்கிறாங்க . நான் ஒரு சின்ன வார்த்தை தான் பேசினேன். அதுவும் நாகரீகம் இல்லாத வார்த்தை இல்லையே. எதுக்கு நம்ம கூட பேச மாட்டேன்கிறாரே ஏன் ? என்று கேட்க மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கார்த்திக்.

மனைவி வேறு. நாம் வேறு. அவள் கிருஷ்ணனுக்கு உரிமையுள்ளவள் அவளை அவர் பேசலாம் அடிக்கலாம். ஒரே குடும்பம். நாம் அப்படி இல்ல. நான் வேறானவன் . அதுதான் நான் பேசிய வார்த்தை கிருஷ்ணனுக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது

உறவுகள் என்பது வேறு. நட்பு என்பது வேறு . அது வேறு இது வேறு என்பதை உணர்ந்து கொண்டான்.

இனிமேல் யாரிடம் பேசுவது என்றாலும் தடித்த வார்த்தைகளைப் உபயோகிக்கக் கூடாது. நாகரீகமற்ற பேச்சுக்களை பேசக்கூடாது என்று அன்றிலிருந்து முடிவு செய்தான் கார்த்திக்.

அதுவேறு இது வேறு என்பது அவன் மனதில் ஆணித்தரமாக பதிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *