சிறுகதை

அதுக்கும் மேலே – ஆவடி ரமேஷ்குமார்

பெரம்பூர் ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த தனது தந்தை டாக்டர் சிவசுந்தர் அருகில் வந்தார் எழுத்தாளர் கிருஷ்ணபிரகாஷ்.

” அப்பா, நானும் வாணியும் டெல்லி போக ரெடியாகிட்டோம். ஷோபாகிட்ட ரெண்டு சாக்கு மூட்டைகள் வச்சுருக்கேன். நாளைக்கு ரெண்டு பசங்க என்னை தேடி வருவாங்க. இந்த மூட்டைகளை அவர்களிடம் கொடுத்திருங்க”.

” சரி கொடுத்திர்றேன். என்ன மூட்டைப்பா இது?”

” ஒன்னுல நான் எழுதிய நாவல்கள். இன்னொன்னுல என் சிறுகதைகள் வந்த வார இதழ்கள்” அவைகளை தொட்டு தடவிப்பார்த்தார் சிவசுந்தர். மகனும் மருமகளும் ஏர்போட் செல்ல வெளியேறியதும் அவரின் நினைவுகள் இருபத்தைந்து வருடங்கள் பின் நோக்கி சென்றது. B.Sc.,முதலாம் ஆண்டில் சேர்ந்திருந்தான் கிருஷ்ணபிரகாஷ். முதல் செமஸ்டரில் வாஸ்அவுட்! பெல்ட் எடுத்து அடித்த சிவசுந்தர், ” ஏன்டா ராஸ்கல்! டாக்டர் ஆக்கிப்பார்க்கனும்னு உன்னை படிக்க அனுப்பினா பார்வை,போர்வைனு காலேஜ்ல கையெழுத்து பத்திரிக்கையாடா நடத்திட்டிருக்கே..படவா! வாஸ்அவுட் ஆகாம என்ன ஆகும்?” என்று கத்தினார். B.Sc.,யை முடிக்காமல் பத்திரிக்கைகளில் நாற்பது கதைகளை எழுதிவிட்டான் கிருஷ்ண பிரகாஷ். விளைவு?18 அரியர்ஸ்!B.Sc., முடிப்பான்;MBBS படிப்பான்; தன்னைப்போலவே டாக்டர் ஆவான் என்ற தன் ஆசையை கடைசியில் நிராசையாக்குவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

B.Sc.,யை அவன் முடிக்கவேயில்லை! இப்போது 900 நாவல்கள்,1800 சிறுகதைகள் என்று எழுதி குவித்துவிட்டான். மறுநாள்.மகன் சொன்னது போலவே இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். வயது 24 க்குள் தான் இருக்கும்.” சார்,ரைட்டர் சார் ஏதாவது சொல்லிட்டு போனாருங்களா?” உயரமாய் இருந்தவன் கேட்டான்.”

சொன்னார்.முதல்ல உட்காருங்க” என்று எதிர் ஷோபாவை காட்டிவிட்டு அவர்களுக்காக சமயலறைக்கு போய் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார் சிவசுந்தர்.” ஆமாம்,நீங்க எதுக்கு இந்த சாக்கு மூட்டைகளை வாங்க வந்திருக்கீங்க?”” சார், நானும் இவனும் சென்னை பல்கலை கழகத்திலே ‘ டாக்டர்’ பட்டம் வாங்கிறதுக்காக ரைட்டர் சாரோட எழுத்துக்களை ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கோம்.

அதுக்கு சாரோட நாவல்கள்,சிறுகதைகள் முழுமையாக கிடைக்கல.சார்கிட்ட கேட்டிருந்தோம்.அவர்தான், ‘ நான் நாளைக்கு டெல்லி போறேன். எங்கப்பா வீட்ல இருப்பார். அவர்கிட்ட சொல்லிட்டு போறேன். வீட்டுக்கு வந்து வாங்கிக்குங்க’ னு சொன்னார்.

“டாக்டர் சிவசுந்தரின் கண்கள் பணித்தது.” ‘ டாக்டர்’ பட்டம் நீங்க வாங்கறதுக்காக என் மகனோட எழுத்துக்களை ஆராய்ச்சி பண்ண போறீங்களா? ரொம்ப சந்தோஷம் தம்பிகளா” என்று அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.இரண்டு சாக்கு மூட்டைகளை அடையாளம் காட்டினார்.

மேலும், “ரைட்டர் சாருக்கு டெல்லி யுனிவர்சிட்டி ‘ டாக்டர்’ பட்டம் கொடுக்கிறாங்க.அதை வாங்கத்தான் அவர் ஒய்ப் கூட டெல்லிக்கு புறப்பட்டு போயிருக்கார்” என்றார். இதை சொல்லும் போது அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *