செய்திகள்

அதி விரைவாக உருகி வரும் கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள்

Spread the love

சென்னை, ஆக. 26–

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் அதி விரைவாக உருகி வருவதால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

அன்டார்டிகாவை அடுத்து, உலகிலேயே பனிக்கட்டிகளால் ஆன இரண்டாவது மிக பெரிய இடம் கிரீன்லாந்து. தற்போது அந்த தகுதியை இழந்து வருகிறது. கிரீன்லாந்து என்னும் இந்தப் பனிப்பரப்பு, 80 சதவிகிதம் பனித் தகடுகளால் ஆனது. இந்தப் பனிப்பரப்பில் 98 சதவிகித பனித்தகடுகள் தற்போது உருகிக் கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

கிரீன்லாந்தில் உள்ள மொத்த பனித் தகடுகள் முழுவதுமாக உருகினால், கடல் மட்டத்தின் அளவு 23 அடிகள் உயரும். ‘கடல் மட்டம் உயர்வதற்கான அதிக பங்களிப்பை கிரீன்லாந்து இந்த ஆண்டு அளித்துள்ளது’ என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் மார்கோ டெடெஸ்கோ (Marco Tedesco).

தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தரவு மையத்தின் கணக்கீட்டின்படி இந்த ஆண்டு ஜூன் 11 முதல் 20ஆம் தேதிக்கு இடையில், கிரீன்லாந்தின் பனித் தகடுகள் 80 பில்லியன் டன் பனிக்கட்டிகளை இழந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 197 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகிவிட்டன. இது 80 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு சமமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதேபோல், ஆகஸ்ட் 1 ந்தேதி வரலாற்றில் இல்லாத அளவு, ஒரே நாளில் 12.5 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகின. அதற்கு முதல்நாள் 10 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. இந்த இரண்டு நாட்களில் உருகிய பனிக்கட்டிகளால், மொத்த ஜெர்மனியையும் 7 செமீ தண்ணீரால் நிரப்பிவிடலாம் என்கிறார் காலநிலை நிபுணர் மார்ட்டின் ஸ்டெண்ட்ல்.

கடந்த 2012இல் கிரீன்லாந்து இது போன்ற மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உருகும் நிலையைச் சந்தித்தது. அந்த ஓர் ஆண்டில் மட்டும் 250 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகின. ஆனால், இன்னும் இந்த ஆண்டு முடிவு பெறாத நிலையில், கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகிய அளவு 250 பில்லியன் டன்களைக் கடந்து சென்றுவிட்டது. 1980 களுடன் ஒப்பிடுகையில் இங்கு பனிக்கட்டிகள் உருகும் விகிதம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ஓர் ஆய்வின்படி, கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகும் அளவு, கடந்த 350 வருடங்களில் எப்போதும் இல்லாத அளவு அதிகம் என்கிறார்கள். இதுகுறித்து ஆராய்ந்த அமெரிக்க மற்றும் டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள், 2100 ஆம் ஆண்டுக்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகள், கடல் மட்டத்தை 5 முதல் 33 செமீ வரை உயர்த்திவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *