நாடும் நடப்பும்

அதிவேக வளர்ச்சிக்கு மோடியின் ‘கதி சக்தி’ திட்டம்


ஆர்.முத்துக்குமார்


நமது 75–வது சுதந்திர தின நாளில் தலைநகர் டெல்லியில் கொடி ஏற்றி பேசியபோது பிரதமர் மோடி ரூ.100 லட்சம் கோடியில் ‘கதி சக்தி’ திட்டத்தை அறிவித்து இருந்தார்.

அதன் நோக்கம் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மேன்மைபடுத்துவதாகும். நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் ஏராளமான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இதற்காக பிரதமரின் ‘கதி சக்தி’ என்ற பெயரில் தேசிய அளவிலான திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடித்தளம் அமைக்கும் தேசிய அளவிலான மிகப்பெரிய திட்டமாக ‘கதி சக்தி’ இருக்கும்.

இப்போது நாட்டில் அனைத்து போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கும் முறை இல்லை. இதில் உள்ள இடர்பாடுகளை உடைக்கும் வகையில் இந்த திட்டம் அமையும். இதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் குறைவதுடன் தொழில் துறையின் உற்பத்தியும் அதிகரிக்கும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலக சந்தையில் போட்டியிடுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

வருங்கால பொருளாதார மண்டலங்களின் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளை வழிநடத்தவும் இந்தத் திட்டம் உதவும்.

இப்படிப்பட்ட செயல் திட்டத்தை இதற்கு முன்பும் அறிவித்து இருந்தாரே? என்று கேள்வி எழுப்பலாம், அது சாத்தியமா? என்றும் யோசிக்கலாம். ஆனால் சமீபமாக பங்கு மார்க்கெட்டில் வெளிவரும் புதிய பங்கு வெளியீடுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அன்னிய முதலீடுகளும் கணிசமாகவே வருகிறது.

இதை பார்க்கும்போது இந்திய தொழில்துறை வளர்ச்சிகள் மீது சர்வதேச நிபுணர்களின் நம்பிக்கை இருப்பதை தான் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே வருங்காலத்தில் இப்படி பெரிய முதலீடுகளை பெறுவதில் சிக்கல் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்தியாவிலேயே தயாரிப்பு என்று பிரதமர் மோடி முழக்கமாக அறிவித்தபோது நவீன தொழில்நுட்ப கருவிகளை நம்நாட்டில் தயாரிக்க முடியுமா? என்று நம்பாதவர்கள் இன்று செல்போன் ஏற்றுமதியில் நாம் செய்து வரும் சாதனை வியப்பாகத்தான் இருக்கிறது.

ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு செல்போன் இறக்குமதி செய்த காலம் மாறி நாம் தற்போது ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பு செல்போன்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இளைஞர்கள் தொழில்நுட்ப உதவிகளுடன் புதுப்புது தொழில் துவங்க திட்டமிட்டு அவற்றை செயல்படுத்த தயாராகி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ‘ஸ்டாட் அப்’ நிறுவனங்களுக்கும் நிதி உதவிகளும் தந்து வழி நடத்த தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி அன்றைய உரையில் உறுதி தந்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *