சிறுகதை

அதிர்ச்சி – மு.வெ.சம்பத்

பரமசிவம் தனது மனைவி கோகிலாவுடன் வாழும் இந்த வீட்டை பராமரிக்க ஆரம்பித்து இன்றுடன் இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது.

பரமசிவத்திற்கு முன்னால் பிறந்த சகோதரி நிர்மலா மற்றும் அவளது கணவன் ரவி இவர்களுடன் இருந்த போது வீடு நிறைந்து தான் இருந்தது. கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் தானிருந்தது. நிர்மலா பையனையும் தனது மகளையும் பரமசிவம் நன்கு மேற்படிப்பு வரை படிக்க வைத்தார்.

ரவி ஒரு நாள் பரமசிவத்திடம் வந்து நாங்கள் அடுத்த தெருவில் உள்ள நிர்மலா பெயரில் உள்ள வீட்டிற்கு செல்கிறோம் என்றார்.

பரமசிவம் எவ்வளவோ தடுத்தும் பயனில்லாமல் போனது. இதற்குப் பிறகு ரவி பையன் மகேந்திரன் ஒரு கம்பெனியில் நல்ல பதவியில் வேலைக்குச் சேர்ந்தார்.

பரமசிவம் தனது சகோதரி குடும்பம் சென்றதும் தனிமைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தார். கோமதியை தனது கம்பெனிப் பொறுப்பை எடுத்துக் கொள்ளச் சொன்ன போது அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். கைவினைப் பொருட்கள் செய்தல், புடவையில் வண்ணத் தையல் போடுவது போன்ற இன்னும் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நிறைய பேர்களுக்குக் கற்றும் தந்தாள்.

நிறைய கம்பெனிகள் பங்கு பெறும் ஒரு கருத்தரங்குக்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு பரமசிவம் அதில் கலந்து கொண்டார். கம்பெனிகளின் உற்பத்தி பொருள் தரம், லாபம் ஈட்டுவது, கம்பெனிகளுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற பல சங்கதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அவை பலரது கருத்துக்களால் அலசி ஆராயப்பட்டது. சில சமயங்களில் ஆட்குறைப்பு தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறதென ஒட்டு மொத்த கருத்தாய் அதில் வைக்கப் பட்டது.

மகேந்திரன் கம்பெனி எடுத்த சீர்திருத்த நடவடிக்கை எதிரொலியாக மகேந்திரனுக்கு வேலை பறிபோனது. இந்த வேலையிழப்பு மகேந்திரன் குடும்பத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரவி சிற்சில வேலைகளுக்குச் சென்றாலும் வீட்டின் அன்றாட ஓட்டத்தில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது. கைப்பணம் கரைந்து கடன் வாங்கும் நிலையில் குடும்பம் தள்ளப்பட்டது.

இரண்டு மாதமாக சகோதரியிடமிருந்து எந்தத் தகவலும் வராதது கண்டு பரமசிவம் தனது மனைவியுடன் நிர்மலா வீட்டிற்கு விரைந்தார். வீட்டில் நுழைந்ததும் அங்கு நிலவும் சூழல் ஒரு அசாதாரண நிலையையே அவருக்கு உணர்த்தியது.

நிர்மலா அழுகையுடன் வீட்டுச் சூழ்நிலையைக் கூறியதும் பரமசிவம் ஏன் என்னிடம் கூறவில்லையெனக் கடிந்து கொண்ட வேலையில், ரவி உள்ளே வர, பரமசிவம் உடனே இந்த வீட்டிலிருந்து நமது வீட்டிற்கு வாருங்கள். ஏதும் பேச வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என்றார்.

மகேந்திரனை அழைத்து நாளையிலிருந்து நமது கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொள் என்றார். இந்த வேளையில் தனது எண்ணமாகிய மகேந்திரன் கோமதி திருமணத்தை பற்றியும் கூற ரவி எங்கள் பாக்கியம் எனக் கூற பரமசிவம் விடைபெற்றார்.

எல்லா விஷயங்களும் நினைத்தபடி நடந்தது கண்டு பரமசிவம் மகிழ்வடைந்தார். அன்று பரமசிவம் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகையில் அவர் மகள் கோமதி தனது கணவனிடம் வருமானம் வருகிறதென்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்து விடாதீர்கள். எந்த நிலை வந்தாலும் நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். நம் சம்பாத்தியத்தில் தான் நாம் வாழ வேண்டும். புரிந்ததா? என்று கூறிய மகளின் வார்த்தைகளைக் கேட்ட பரமசிவம் அரும்பாடுபட்ட சேர்ந்து வாழும் வாழ்க்கையை மகள் கெடுத்து விடுவாளோ என அதிர்ச்சியில் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றார்.

கிளிக்கு இறக்கை முளைத்தால் பறந்து ஓடத் தானே செய்யுமென மனதில் நினைத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *