செய்திகள்

அதிமுகவுக்கு அழைப்பு ஏன்? மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் விளக்கம்

Makkal Kural Official

சென்னை, அக். 03–

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்றும் மதுவிலக்கை தமிழ்நாட்டில் தள்ளி வைத்தது யார் என்பது குறித்தும் திருமாவளவன் மாநாட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

இந்த மாநாடு பற்றி திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவிக்கும் போதிலிருந்தே மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமாக பேசப்பட்டன. திருமாவளவன் பேசுகையில் இந்த மாநாட்டிற்கு அனைவரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அப்போது அதிமுக குறித்த கேள்வி எழுந்த போது , அதிமுகவினரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்றுதான் அழைப்பு விடுத்தார் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார் திருமாவளவன், 2026 தேர்தலுக்கு தற்போது கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவினருக்கு அழைப்பு விடுத்தார் திருமாவளவன். அதன் பிறகு திமுகவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவித்த பிறகு தான் அரசியல் வட்டாரத்தில் உலாவிய பேச்சுக்கள் சற்று தணிந்தன.

இந்த பேச்சுகளுக்கு நேற்று நடைபெற்ற மாநாட்டிலும் திருமாவளவன் விரிவான விளக்கத்தை அளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த மாநாடு குறித்து அரசியல் பேசவேண்டாம் என்று குறிப்பிட்டேன். அதனால் தான் நான் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தேன். உடனே பலர், நான் கூட்டணி மாறப்போகிறேன் என்று கூறி, இந்த மாநாட்டின் நோக்கத்தையே திசை திருப்ப பார்த்தார்கள்.

திருமாவளவன் விளக்கம்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. காவிரி, இலங்கை பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து பேசவில்லையா? அப்படி தான் அனைவரும் இணைந்து ‘மது ஒழிப்பு’ பற்றி பேசி இருக்கவேண்டும்.” என அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து நேற்று மாநாட்டில் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

” சில அரைவேக்காடுகள் திருமாவளவன் தமிழ்நாட்டில் மட்டுமே மது விலக்கு வேண்டும் என்கிறார் என கூறுகின்றனர். ஆனால், மது விலக்கு இந்தியா முழுக்க இருக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். மதுவை ஒழிக்க திமுகவுக்கு கொள்கை அடிப்படையில் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

திமுக ஆட்சியில் அண்ணா மதுவிலக்கை தளர்த்தவில்லை. 1972 இல் மதுவிலக்கை தளர்த்திய கலைஞர் 2 ஆண்டுகளிலேயே 1974 இல் மதுவிலக்கு அமல்படுத்தினார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என கூறியவர் கலைஞர். அதன்பிறகு மதுவிலக்கை தளர்த்தி 1981 முதல் 1987 வரை மது விலக்கை தளர்த்தி கள்ளு, சாராய கடைகளை திறந்தது எம்ஜிஆர். 1991 இல் ஜெயலலிதா ஆட்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு வந்த பிறகு டாஸ்மாக் நிறுவனத்தையே தொடங்கினார். அதிமுகதானே மது விலக்கை முழுமையாக தளர்த்தியது. இப்படி இருக்கையில் மதுவிலக்கை தளர்த்தியது யார்? டாஸ்மாக்கை ஆரம்பித்தது யார்.? ” என்று நேற்றைய மாநாட்டில் திருமாவளவன் விளக்கமாக பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *