மக்களிடம் உரையாற்றிய ஜோ பைடன் விளக்கம்
நியூயார்க், ஜூலை 25–
அமெரிக்க அதிபர் பதவியை விட நாட்டை அதிகமாக மதிப்பதால், போட்டியில் இருந்து விலகினேன் என்று, போட்டியில் இருந்து விலகிய பிறகு மக்களிடம் ஜோ பைடன் முதன்முறையாக உரையாற்றியபோது கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அவர் தேர்தலில் இருந்து விலகினார். மேலும், தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து கமலா ஹாரிஸும் 24 மணி நேரத்தில் பல நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக ரூ.678 கோடி நிதி திரட்டி சாதனை படைத்திருந்தார். மேலும், இவருக்கு ஆதரவும் பெருகி கொண்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகியதன் காரணம் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து முதல் முறையாக நேற்று பேசினார்.
விலகலுக்கான காரணம் என்ன?
அப்போது பைடன் கூறியதாவது:–
“இளைய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன். மேலும், நமது நாட்டை ஒன்றிணைக்க இதுவே சரியான வழியாகும். தற்போது ஜனநாயகத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நம் ஜனநாயகத்தை பாதுகாக்கவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியிருக்கிறேன்.
நம் நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் இந்த பதவியை மிகவும் மதிக்கிறேன், ஆனால் அதைவிட என் நாட்டை அதிகம் நேசிக்கிறேன். அதிபராக நான் செய்த சாதனைகள், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எனது பார்வை ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில் நான் 2-வது முறையாக அதிபராகத் தகுதியுடனேயே இருக்கிறேன்.
ஆனால், இதை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தைக் காப்பது தான் மிகவும் முக்கியமானது. மேலும், அமெரிக்க மக்களுக்காக பணி செய்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இப்போது நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்க மக்களிடம் இருக்கிறது”, என்று ஜோ பைடன் கூறினார்.