போஸ்டர் செய்தி

அதிபர் டிரம்பை சந்திப்பதற்காக வியட்நாமுக்கு ரெயிலில் புறப்பட்டார் கிம் ஜாங் அன்

ஹனோய்,பிப்.24–
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திப்பதற்காக வியட்நாம் ஹனோய் நகருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரெயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூ ரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதற்கு தீர்வுகாண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாதம் (பிப்ரவரி) 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வடகொரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வியட்நாமின் ஹனோய் நகரில் இச்சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் புறப்பட்டுள்ளார். பியாங்யாங் நகரில் இருந்து ரெயிலில் புறப்பட்டுள்ள கிம் ஜாங் அன், 4,500 கி.மீட்டர் தூரம் சுமார் 60 மணி நேரம் பயணம் மேற்கொண்டு வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம், மாநாடு நடைபெறும் ஹனோய் செல்கிறார். கிம் ஜாங் அன்-உடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *