பீஜிங், ஏப். 16–
அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு கொள்கைக்கு பதிலடியாக, போயிங் விமானங்களை வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி விதித்து, வர்த்தக போரில் ஈடுப்பட்டு வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவிகித வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவிகித வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
போயிங் நிறுவனத்துக்கு அடி
இந்நிலையில், போயிங் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்க கூடாது என சீன விமான சேவை நிறுவனங்களுக்கு அந்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், விமானங்கள், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளை வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. வருவாயின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக உள்ள போயிங், டாலர் மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
சீனாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளில் தனது 20 சதவிகித விமான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய போயிங் ஒப்பந்தம் செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், போயிங் நிறுவனத்தின் 25 விழுக்காடு விமானங்கள் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில் சீனாவின் நடவடிக்கை போயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
![]()





