Uncategorized

அதிக கட்டண வசூல் புகார்: 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு, செப். 17-

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் முடிவு என்ன என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ரயில்கள், பேருந்துகள் என பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கல்வி நிலையங்கள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் தமிழக அரசு 16 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. கொரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், பள்ளிகள் திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், பாடத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்று ஈரோட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “பெற்றோர்கள், மாணவர்கள் மனநிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஆன்லைன் மூலமாக சில மணி நேரங்கள் மட்டுமே பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் நிலையில் பல பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோர்களை நிர்பந்திக்கின்றன. அதுகுறித்து பேசிய அமைச்சர், “அதிக கட்டணம் வசூலித்ததாக தற்போது வரை 14 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *