கார்டூம், ஏப். 29–
சூடானில் சிக்கித்தவித்த மேலும் 754 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதன் மூலம், சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் களமிறங்கியுள்ளன. அதன்படி சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ என்னும் திட்டத்தை இந்திய அரசு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்டு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் 754 பேர் திரும்பினர்
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து மூலம் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள், அங்கிருந்து விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு முதற்கட்டமாக மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் கடந்த 26-ந்தேதி டெல்லி வந்தடைந்தனர். அடுத்ததாக 246 இந்தியர்கள் நேற்று முன்தினம் மும்பை வந்து சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து விமானப்படையின் சி.17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 392 இந்தியர்கள் அடங்கிய 3-வது குழுவினர் நேற்று டெல்லிக்கு வந்தனர். இதைப்போல 362 பேர் கொண்ட 4-வது குழு நேற்று பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது. நேற்று மட்டும் 754 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த 1,360 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.