செய்திகள்

அதிகாரமோ, ஒத்துழைப்போ இல்லை: புதுவை முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி, மார்ச் 23–

புதுவை சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி அரசுக்கு போதிய அதிகாரமும் இல்லை, அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு இப்போது நடந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான உறவு இருப்பதாகவே இரு தரப்பும் கூறி வருகிறது. இருப்பினும், இரு தரப்புமே திரைமறைவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து காங்கிரஸின் வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, “ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தங்களில் நிர்வாக சிக்கல்கள் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்போது வரை 1200 கோடியில் பணிகள் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், இப்போது வரை ரூ.256 கோடிக்குக் கூட பணிகள் நடக்கவில்லை. ஜூன் மாதத்திற்குள்ளாவது இந்த பணிகள் நிறைவடையுமா எனத் தெரியவில்லை.

அதிகாரம், ஒத்துழைப்பு இல்லை

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும், அரசுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. திட்டத்தின் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளரே இது குறித்து அனைத்திலும் இறுதி முடிவு எடுக்கிறார். அவரிடமே அனைத்து நிதி அதிகாரம் உள்ளது. இதனால் என்ன பணிகள் நடக்கிறது என்று கூடச் சொல்வதில்லை. அவ்வளவு ஏன் இது தொடர்பான கோப்புகள் கூட அரசுக்கு வருவதில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசு சில முடிவுகள் எடுக்கும்போது அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றீர்கள். ஆனால், முழு அதிகாரம் இல்லாத நிலையில் தான் புதுச்சேரி அரசு உள்ளது. இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில சொந்த வருவாயை உயர்த்தியே நிர்வாகத்தைச் சமாளித்து வருகின்றேன். கடந்த காலங்களில் ஒன்றிய அரசு கூடுதலாக 90% வரை நிதி வழங்கிய நிலையில், இப்போது அது படிப்படியாகக் குறைந்து 23 சதவீதத்துக்கு வந்துவிட்டது. அதேநேரம் நமது வருவாய் 61%ஆக உயர்த்திருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *