முழு தகவல்

அதிகாரங்களை மக்களிடம் பகிர்ந்தளிக்க வலியுறுத்திய ராம் மனோகர் லோகியா!

ராம் மனோகர் லோகியா, உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில், 1910 மார்ச் 23 ந்தேதி மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஹீராலால் காங்கிரஸ் தலைவர். தாய் சாந்தா ஓர் ஆசிரியர். சிறுவயதிலேயே தாயை இழந்த ராம் மனோகர் தந்தையால் வளர்க்கப்பட்டார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா, பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்.

1941 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். அப்போது ராம் மனோகர் லோகியா காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார். அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்.

காந்திக்கு ஏற்பட்ட கோபம்

ராம் மனோகர் லோகியா, ‘இன்றைய சத்யாகிரகம்’ என்ற கட்டுரையை எழுதியதற்காக, அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்த ஆங்கில அரசு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராம் மனோகர் லோகியாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மகாத்மா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காந்தி, டாக்டர் ராம் மனோகர் லோகியா சிறைக்குள் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவரைப் போன்ற துணிவும் எளிமையும் கொண்ட மனிதர் வேறு யாரையும் நான் கண்டதில்லை என்றார்.

1947-ல் நாடு விடுதலை பெற்று, மக்கள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த வேளையில், நாட்டில் கிளர்ந்த இந்து- முஸ்லிம் வேற்றுமை ராம் மனோகர் லோகியாவுக்கு வேதனையை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவதற்கு லோகியோ கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். மதரீதியில் பிளவுபட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியை முன்னெடுத்து, மக்களை ஒன்றுபடுத்த முயன்றார். பிரிவினையால் பாதிக்கப்பட்ட மதக்கலவர பூமிகளில் அமைதி திரும்பப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

விடுதலைக்குப் பின், ஓய்வுக்காகத் தனது பொதுவுடைமை நண்பரான ஜூலியா மெனசெஸ் (Juliao Menezes) என்பவரின் அழைப்பின் பேரில் ராம்மனோகர் லோகியா கோவா சென்றார். அங்கு கோவாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைக் கண்டித்துப் போராடினார். அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டார். ஆயினும், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கோவா அரசு நீக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

மக்கள் பங்களிப்பு அவசியம்

நாடு விடுதலை பெற்ற பிறகு, உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோகியா. நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்தார். தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார். மக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம் மனோகர், ‘பணியாரி’ நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அது இன்றும் ‘லோகியா சாகர் அணை’ என்ற பெயருடன் விளங்குகிறது.

“ஆக்கப்பூர்வமான கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்யாகிரகம் என்பது வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது” என்பது ராம் மனோகர் லோகியாவின் புகழ்பெற்ற பொன்மொழி. பொதுப்பணிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட நம்பினார்.

சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ராம் வலியுறுத்தினார். குடியரசு நாட்டில் மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டி, மக்கள் குறைகேட்புக்காக ‘ஜனவாணி தினம்’ என்ற நாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளைப் பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.

சாதி வேற்றுமையால் தடை

சாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக ராம் கூறினார். “சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது; மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையைக் குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளைக் குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும்” என்றார் ராம் மனோகர் லோகியா.

மேல்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் என்று கருதினார். உணவில் மட்டுமல்லாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும் என்றும் ராம் அறிவுறுத்தினார்.

அணு ஆயுதம் வேண்டும்

அரசின் அதிகாரங்களைக் குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய ராம் மனோகர், ‘ஹிந்த் கிசான் பஞ்சாயத்’ அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார். மேலும் மக்களுக்கான திட்டங்கள் சரியாக மக்களைப் போய்ச் சேர்வதில்லை என்பதை விளக்கும் ‘தீன் அணா பந்தரஹ் அணா’ என்ற இவரது நாடாளுமன்றப் பேச்சு மிகவும் பிரசித்தம்.

1962-ல் சீனா, இந்தியா மீது போர் தொடுத்தபோது, இந்தியா, பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டுமானால், தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.