சிறுகதை

அதிகப்படியான ஆசை-ராஜா செல்லமுத்து

அன்று வெளியான திரைப்படத்திற்கு தான் மட்டும் செல்லாமல் தன் நண்பர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தான் ராஜேஷ் .அவன் எப்போது போனாலும் எங்கே போனாலும் திரைப்படம் ஆகட்டும் நல்ல விஷயங்கள் ஆகட்டும் நல்ல நண்பர்களை அழைத்து செல்வது ராஜேஷின் வழக்கம் .

இந்த முறை புதிதாக வெளியான திரைப்படத்திற்கு சுனிலை அழைத்துச் சென்றான் ராஜேஷ்

அவன் இருக்கும் இடத்திலிருந்து திரையரங்கம் பக்கம். சுனில் தான் கொஞ்சம் முன்னதாக வரவேண்டும் .

ஆனால் சுனில் எந்தவித தகவலும் தராமல் இருந்தார். அவருக்கு ஐந்தாறு முறை போன் செய்தும் சுனில் போனை எடுக்கவில்லை. அவரின் நடவடிக்கையை பார்த்த ராஜேஷ் தலையிலடித்துக் கொண்டான்.

அவன் அவன் டிக்கெட் எடுத்தவங்க கிட்ட பத்து தடவை போன் பண்ணி எங்க இருக்கீங்க ? நான் எங்க வரட்டும்னு கேப்பாங்க ? ஆனா இந்த சுனில் பாரு. அவனுக்கு டிக்கெட் நான் எடுத்துட்டு பத்து தடவை போன் பண்றேன்; பதில் சொல்ல மாட்டேங்குறான் ; என்ன பொழப்பு இது என்று ராஜேஷ் நினைத்து கொண்டான்.

திரையரங்க வளாகத்தில் நின்றுகொண்டு ஒவ்வொருவரையும் ராஜேஷ் பார்த்துக் கொண்டே இருந்தான். அதில் ஒரு முகம் கூட சுனில் முகம் இல்லை.

இந்த சுனிலுக்கு ஏன் இந்த ஈகோ ? நம்ம டிக்கெட் எடுத்து இருக்கம்; ஒரு வார்த்தை கூட கேட்கல; எங்க நிக்கிறீங்க ? என்ன ஏதுன்னு கூட கேட்கல? போதுமடா சாமி என்று ராஜேஷ் நொந்து போனது தான் மிச்சம்

இப்படிப்பட்ட ஆட்களுடன் இனி கூட்டு வைத்துக் கொள்வது முறை இல்லை என்பதை தெரிந்து கொண்டான் ராஜேஷ்.

படம் ஆரம்பித்து விடுவார்களோ என்று படக் படக்கென்று ராஜேஷுக்கு அடித்துக்கொண்டது

ஆனாலும் சுனில் தியேட்டருக்கு வந்தபாடில்லை படம் ஆரம்பிக்கும் சில நொடிகளுக்கு முன்னதாக தான் சுனில் பேசினார்.

எங்க இருக்கீங்க ? என்று ரொம்ப சாதுவாக கேட்டார்.

நான் தியேட்டர்குள்ள இருக்கேன் என்று ராஜேஷ் பதில் சொன்னான்.

உங்களுக்கு வாட்ஸ்அப்ல டிக்கெட் அனுப்பி இருக்கேன். நீங்க தியேட்டருக்குள் வரலாம் என்று ஒற்றை வார்த்தையில் போன் செய்து கட் செய்தான் ராஜேஷ்.

சுனில் வந்தார் . அமர்ந்தார் டிக்கெட்டுடன் சேர்த்து இடைவேளைக்கு முன்னதாகவே சாண்ட்விச் ஆர்டர் செய்து இருந்தான் ராஜேஷ்.

இடைவேளைக்கு முன்னதாகவே அதைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்கி கையில் பத்திரப்படுத்திக் கொண்ட சுனில் படத்தையும் பார்க்காமல் அடிக்கடி செல்போனையும் நோண்டிக் கொண்டு இருந்தார்.

இருட்டான அந்த திரையரங்கில் அவரின் செல்போன் வெளிச்சம் ராஜேஷை மட்டுமல்ல, அந்த வரிசையில் உட்கார்ந்து இருந்த அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

ஏன் இப்படி இருக்காங்க ? ஒரு மேனர்ஸ் இல்லையா? என்று ராஜேஷ் நொந்து கொண்டான்.

இடைவேளை வந்தது.

சாண்ட்விச்சை லபக் லபக் என்று சுனில் கவ்வினார் …சாப்பிட்டு முடித்துவிட்டு தண்ணீர் பாட்டில் தண்ணீர் பாட்டில் என்று கேட்டார்

அமைதியாக இருந்தான் ராஜேஷ்.

மறுபடியும் தண்ணீர் பாட்டில் தண்ணீர் பாட்டில் என்று கேட்க

சார் இருபது ரூபா விக்கிற தண்ணீர் பாட்டில் இங்க 60 ரூபா வெளிய போய் சாப்பிட்டு விடலாமே என்று ராஜேஷ் சொன்னான்.

அதுவரை அமைதியாக இருந்த சுனில் தன் வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க வேகமாக ஓடினார்.

ஒருவழியாக பல நச்சரிப்புகளுக்கு இடையில் சுனில் உடன் படம் பார்த்தது ராஜேஷுக்கு என்னவோ போல் ஆனது.

வெளியே வந்தார்கள். வண்டியை எடுக்க போனார் சுனில்.

அப்போதும் ராஜேஷிடம் பணம் கேட்டார்.

எதுக்கு சார் பணம்? என்று ராஜேஷ் கேள்வி கேட்டான்.

பைக் ஸ்டாண்ட் என்று சொல்ல அதற்கான பணத்தையும் ராஜேஷ் கொடுத்தான்.

வண்டியில் ஏறி அமர்ந்த போது வண்டியில பெட்ரோல் இல்லை என்று சுனில் சொல்ல

ராஜேஷுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

என்ன சார் எதுவுமே இல்லாம தான் அந்த சினிமாவுக்கு வந்தீங்களா? என்கிட்ட காசு இல்லை என்று சொன்னான்.

உடனே சுனில் பெட்ரோல் இல்லை என்ற அடையாளத்தை தன் வண்டியில் காட்டினார்.

ராஜேஷ் அதை கண்டுகொள்ளவே இல்லை . உடனே பெட்ரோல் பங்குக்கு போன சுனில் தன் பெட்ரோல் கார்டை எடுத்து பெட்ரோல் போட்டார்.

என்ன இது ? பெட்ரோல் கார்டு தான் இருக்கே….அதில் போட வேண்டியதுதானோ? கிடைக்கிற வரைக்கும் யாரு பணமிருந்தாலும் சுருட்ட வேண்டியது தானா ? என்ன பொழப்பு இது? என்று நொந்து கொண்டான்.

இடையில் காபியும் ராஜேஷ் தன் செலவில் வாங்கி கொடுத்தான்.

அந்த ஒரு நாளிலேயே சுனிலின் குணம் தெரிந்து கொண்டான்.

ஒரு மனிதனுக்கு 300 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட் எடுத்து உள்ளோம். .அதுமட்டுமல்ல சாண்ட்விச்சும் காபியும் வாங்கி கொடுத்துள்ளோம் . தண்ணீர் பாட்டில் வேண்டும் என்று கேட்கிறார் ; அவர் வந்த வண்டிக்காக பைக் ஸ்டாண்ட் பணம் கேட்கிறார்.

வண்டியில் அமர்ந்தவுடன் பெட்ரோல் என்று கேட்கிறார்.

இது அதிகப்படியான ஆசை . இது போன்ற மனிதர்களை நம் வாழ்வில் இருந்து ஒதுக்கி விட வேண்டும் என்று நினைத்தான் ராஜேஷ் . அன்றிலிருந்து சுனில் உடன் அவன் அதிகமாகப் பேசுவதில்லை.

அடுத்த திரைப்படத்திற்கு போகும்போது அவரை ஒதுக்கி விட்டு சென்றான்.

அப்போது சுனில் போன் செய்தார்.

என்ன ராஜேஷ் .புது படம் போட்டு இருக்காங்க போகலையா? என்று சுனில் கேட்டபோது

இல்லைங்க போகல என்று ஒற்றை வரியில் பதில் சொன்னான்.

அந்தப் பதிலின் அர்த்தத்தில் சுனிலின் அதிகப்படியான ஆசை அடங்கியிருக்கிறது என்பது சுனிலுக்குத் தெரிய நியாயமில்லை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *