ஆர். முத்துக்குமார்
ஜி20 அமைப்பின் தலைமை நம்மிடம் வழங்கப்பட்ட நாள் முதலாய் உலக நாடுகளின் பார்வை நம்மீது இருப்பதை அறிவோம். நமது நல்ல சமாச்சாரங்கள் அவர்களை சென்றடைந்த போது மகிழ்ந்தோம். ஆனால் தவறானவையும் அவர்கள் பார்வையில் இருந்து தப்பாதே!
அந்த வகையில் உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபமாக வந்த அதானி குழு சேர்மன் கௌதம் அதானியின் ‘கிடுகிடு’ வளர்ச்சி ஏன்? எப்படி? என்பதை உற்றுக் கவனித்து பல உலக பொருளாதார நிபுணர்கள் கவனித்து வந்ததுடன், அதானி குழுமத்தின் பல்வேறு ‘தில்லு முல்லு’களையும் வெட்ட வெளிச்சமாகிட ஓர் ஆய்வறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் வரை பங்குச் சந்தையில் நட்சத்திர நாயகனாக வலம் வந்த கௌதம் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சில நாட்களில் உடனடி சரிவு 40 சதவிகிதமாகி கௌதமின் இழப்பு 10,000 கோடி டாலராக அறிவிப்பாகி விட்டது.
அதானி நிறுவனம் பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து புகழின் உச்சியில் இருப்பதுடன் பல லட்சம் கோடி டாலர்கள் சம்பாதிக்கும் நிறுவனமாக இருந்த நிலையில் இருந்து தடுமாறி கிடுகிடு என வீழ்ச்சியைக் கண்டது.
இந்த வீழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன்பு தான் கௌதம் அதானியே இரண்டாவது பெரும் பணக்காரர் என்று ‘புரூட் பார்க்’ அறிவித்தது.
ஜனவரி 24 அன்று வெளிவந்த ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கைக்கு பிறகு அதானி குழும பங்குகளின் விலை பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சியை ஏற்படுத்த, கௌதம் அதானி உலக பணக்கார்கள் பட்டியலில் 21–ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கௌதம் அதானி குஜராத்தில் முதல்வராக இருந்த மோடியுடன் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்றவர் ஆவார்.
நல்ல முறையில் வர்த்தகம் புரிகிறார் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மோடியும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய அதானி குழுமத்தை ஆதரித்தார்.
நல்ல மனதுடன் அதானியை ஆதரித்த பிறகு தான் அதானி குழுமத்தின் புகழ் வான் உயர மாறியது.
அந்த அறிக்கைக்குப் பிறகு இதுவரை அக்குழுமம் டாலர் 10,000 கோடியை பங்கு மார்க்கெட்டில் இழந்து விட்டது.
சமீப வாரத்தில் இந்திய பங்குச் சந்தையில் ஆறு அதானி பங்குகளின் விலைகள் தொடர் சரிவுகளால் கிட்டத்தட்ட 35 சதவிகிதத்தை இழந்து விட்டது.
இந்நிறுவன பங்குகளின் விலை தடுமாற்றம் இந்திய பங்குச் சந்தையின் அதிகாரிகளையும் கண்காணிப்பு அமைப்பான செபியையும் பங்கு வர்த்தக குழுவினருக்கு அதிர்ச்சியை தரத் துவங்கி விட்டது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
அதானி குழுமப் பங்குகளை அதிகம் கையில் வைத்திருப்பது மத்திய அரசு நிறுவனங்கள் பல, அதில் முக்கியமானது எல்.ஐ.சியும் ஸ்டேட் பேங்கும் ஆகும்.
அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் சமீபத்து வீழ்ச்சியினால் அடுத்தது என்ன நடக்குமோ? என்ற திகில் கேள்விகளுடன் செபியையும் பங்குச் சந்தையை நம்பி இருப்பவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நிலைமையை உணர்ந்து அதானியும் தங்களது அடுத்த பங்கு வெளியீடான FPOவையும் நிறுத்தி விட்டனர்.
ஐ.பி.ஓ.வை தெரியும். எப்.பி.ஓ.வை பற்றி தெரியாமல் பலருக்கு இருக்கலாம். எப்பிஓ என்பது ஐபிஓவை போன்றதே. பங்கு வெளியீடு செய்யும் போது முதலீடுகளுக்காக பங்குகளை விற்பனை செய்வது அன்றாட நிகழ்வாகும்.
அதை போன்றே எப்பிஓ, அதுவும் ஒரு நிறுவனம் முதலீடுகளை அதிகரிக்க கடன் வாங்காமல் நன்கு நடைபெறும் தங்களது நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு பங்குகளை மேலும் விற்க அனுமதி பெறுவார்கள்.
செபி அமைப்பின் முழு கண்காணிப்பில் தான் பங்கு வெளியீடுகள் இருக்கும்.
இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்ட மறுநாளே கௌதம் அதானி வெளியீடு துவங்கி தங்களது எப்பிஓ வெளியீடு விற்பனை முடிவடைந்த நிமிடத்தில் தனது பங்கு வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்தார்.
அவரது பங்கு வெளியீடு அன்றைய தினம் இவருக்கு பல ஆயிரம் கோடி டாலர் கைக்கு கிடைத்து இருக்குமே, அதைக் கொண்டு பங்கு சரிவை நிறுத்தி இருக்கலாமே? என்பன போன்ற கேள்விகள் எழலாம்!
உண்மை என்னவென்றால் இப்படி பங்கு வெளியீடு செய்து பெறப்படும் நிதியை வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் மட்டுமே உபயோகிக்க முடியும். பங்கு மார்க்கெட்டில் நுழைத்து விடமுடியாது.
அப்படி நுழைய விடாது பங்கு மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து வரும் செபி, அதானி நிறுவன பங்குகள் அதிகம் எல்ஐசி, ஸ்டேட் வங்கிகளிடம் பெருவாரியாக இருப்பதால் பங்கு விலை சரிவு அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மொத்தத்தில் இது தான் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது. இது நமது வணிக ஒழுங்குமுறையின் அடிப்படை தன்மையையும் வலுவற்ற போக்கையும் உலக முதலீட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டுகிறது.
இது நமது பொருளாதாரத்திற்கு மிக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது சமீப வளர்ச்சிகளின் பின்னணியில் வெளிநாட்டு முதலீடுகள் மிகப்பெரிய பலமாகும். வளரும் பொருளாதாரம் என்ற காரணத்தை கூறி முதலீடுகள் செய்ய உலகமே இந்தியா மீது படையெடுத்து வருவது போல் முதலீடுகளை அதிகரித்துக் கொண்டது.
மொரிஷியஸ் நாட்டில் இருந்து 28 சதவிகிதமும் சிங்கப்பூரில் இருந்து 23 சதவிகிதமும் அமெரிக்காவில் இருந்து 9 சதவிகிதமும் நெதர்லாந்து 7 சதவிகிதமும் ஜப்பான் 6 சதவிகிதமும் பிரிட்டன் 5 சதவிகிதமும் ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, சைப்ரஸ் நாடுகளில் இருந்து 2 சதவிகிதமும் வந்துள்ளது.
இப்படி அதானி குழுமம் ஏற்படுத்தி இருக்கும் குழப்பத்தின் பயனாக அன்னிய முதலீட்டாளர்கள் அச்சத்தில் இந்திய முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்து இருப்பதால் பங்கு குறியீடு சரிவை காணத் துவங்கி விட்டது.
தற்சமயம் மும்பாய் பங்குச்சந்தை குறியீடு 60 ஆயிரம் புள்ளிகளில் இருந்தாலும் பங்கு விற்பனை மந்தமாக இருப்பதால் பல பங்குகளின் விலைகள் குறைந்து விட்டது.
குறைந்த விலையில் நல்ல நிறுவன பங்குகளை வாங்க இது நல்ல தருணம் என்றாலும் சரியான வழக்கங்கள் கடைப்பிடிக்காது இருக்கும் நிலையை கண்டு அன்னிய முதலீடுகள் நம்பிக்கையுடன் நமது பொருளாதாரத்தில் முதலீடு செய்வார்களா? என்ற சந்தேகக் கேள்வியும் எழுகிறது.