செய்திகள்

அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, பிப்.2–

அதானி குழும முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023–24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை இன்று அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இரு அவைகளும் கூடியவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பங்குச்சந்தையில் சரிவை சந்தித்து வரும் நிறுவனத்தில் எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டவை முதலீடு குறித்து விவாதிக்க வேண்டும் என பாராளுமன்றத்தின் நோட்டீஸ் அளித்துள்ளோம்.

பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி, தினமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

எல்ஐசி, ஸ்டேட் வங்கி மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்து பொது மக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். உண்மையை கண்டறிய பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *