செய்திகள்

அதானி குழும நிதி முறைகேட்டை விசாரிக்க கோரி காங்கிரஸ் சார்பில் 6 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

டெல்லி, பிப். 3–

அதானி குழுமத்தின் நிதி மோசடி மீதான புகார் குறித்து விசாரிக்க கோரி, காங்கிரஸ் சார்பில் நாடு முழுதும் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை அதாவது 74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதலளித்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறியிருந்தது.

6 ந்தேதி போராட்டம்

இதைத்தொடர்ந்து, அதானியின் அறிக்கைக்கு பதலளித்த ஹிண்டபர்க் நிறுவனம், முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல், ’தேசியம்’ என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. இந்தியா ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசு நாடாகும். ஆனால், அதானி குழுமத்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது” என்று தனது அறிக்கையில் ஹிண்டன்பர்க் தெரிவித்தது.

இதையடுத்து, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், அதானி குழுமம் மீதான புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள நாடு முழுவதும் பிப்ரவரி 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *