டெல்லி, மே 20–
அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவின் ஷார்ட் செல்லர்ஸ்ஸின் துணை நிறுவனமாகக் கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது.
அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாக அதானி நிறுவனம் பதில் அளிக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியதோடு அதானி அம்பானிக்கு பிரதமர் மோடி கைக்கூலியாக செயல்படுகிறார் என்றனர். இதனால் அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. உலக பணக்காரர் வரிசையில் இருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டார் கெளதம் அதானி.
கமிட்டி அறிக்கை
இதன் காரணமாக அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது.
இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என முதல் கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.