சென்னை,
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி, அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் தினமும் இரவு உணவை முடித்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 8 மணியளவில் வழக்கம் போல் அந்த மாணவி தனது காதலருடன் கைகோர்த்தபடி நடைபயிற்சி சென்றுள்ளார். பின்னர், அங்கு மரங்கள் அடர்ந்த மறைவான இடத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
தனிமையில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒருவர் திடீரென்று அங்கு வந்தார். தனிமையில் இருந்த காதல் ஜோடியை பார்த்த அவர், நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை நான் எனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளேன். அதை பாருங்கள் என்று காட்டியுள்ளார். இதை வெளியே விட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டியும் உள்ளார்.
வீடியோ காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அந்த வீடியோ காட்சியை அழித்து விடும்படி அவரிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார். மாணவியின் காதலரான மாணவரும், அந்த வீடியோவை அழிக்கும்படி அந்த வாலிபரிடம் கெஞ்சினார்.
அதையெல்லாம் காது கொடுத்து கேட்காத அந்த நபர், நீ இங்கிருந்து ஓடி விடு. இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று அந்த மாணவரை மிரட்டினார்.
வாலிபரிடம் சிக்கிக்கொண்ட மாணவியை, தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் வற்புறுத்தினார். மறுத்தால் செல்போனில் உள்ள வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். அந்த மாணவி செய்வது அறியாது திகைத்து நின்ற வேளையில், அந்த காம வெறியன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார்.
முன்னதாக அந்த மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு, நான் கூப்பிடும்போது என்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி தனது விடுதி அறையில் இருந்த சகதோழிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். பின்னர் தனது பெற்றோரிடமும் அதுபற்றி கண்ணீருடன் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்யும்படியும் கூறினர். பெற்றோரின் ஆலோசனைப்படி, கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார்.
இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தென் சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் (ஜனவரி 8-ம் தேதி வரை) நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி உள்ளது.
அதில், “நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான். செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்.
நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை; தொடர்ந்து மிரட்டினான். அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்” என்று கூறியதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.