சென்னை, டிச. 25–
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்கள் காதலனை அடித்து விரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தான் காதலிக்கும் 4ம் ஆண்டு மாணவர் உடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவரை தாக்கியுள்ளனர். மாணவரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியிடம் அத்துமீறியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.