செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் நியமனம்

சென்னை, ஆக.11-

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலும் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு தேர்வு செய்து நேர்காணல் நடத்தியது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில், இதற்கான ஆணையை ஆர்.வேல்ராஜிடம் நேற்று வழங்கினார். அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார்.

ஆர்.வேல்ராஜ், ஆசிரியர் துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் படிப்புகள் நிறுவனத்தின் இயக்குனராகவும், அண்ணா பல்கலைக்கழக சி.ஏ.டி., சி.ஏ.எம்.க்கான எப்.ஆர்.ஜி. நிலையத்தின் இயக்குனராகவும் இருந்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் படிப்புகள் நிறுவனத்தின் பேராசிரியராக தற்போது இருக்கிறார்.

193 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பு

ஆர்.வேல்ராஜ், 193 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்வுகளில் 29 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் 4 சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி இருக்கிறார். தேசிய அளவிலான கருத்தரங்கில் 31 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

3 புத்தகங்களை எழுதியுள்ளார். இதுதவிர ரூ.17.85 கோடி செலவிலான 15 ஆராய்ச்சி பணிகளை செய்து முடித்திருக்கிறார். 33 பி.எச்.டி. மாணவர்கள் மற்றும் 2 எம்.எஸ். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் பி.எச்.டி. பிரிவில் 3 படிப்புகளை வகுத்ததோடு, முதுநிலை என்ஜினீயரிங் பிரிவில் 9 புதிய படிப்புகளையும் அறிமுகம் செய்திருக்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை என்ஜினீயரிங் பிரிவில் 2 படிப்புகள் அறிமுகப்படுத்துவதற்கு பங்களிப்புகளை கொடுத்தவர்.

இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் துறை தலைவர் என பல்கலைக்கழக நிர்வாகத்தில் 14 வருட அனுபவத்தை பெற்றவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 7 வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்றிருக்கிறார்.

மேற்கண்ட தகவல் ராஜ் பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *