செய்திகள்

அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாகை, திருவாரூர் தொகுதியில் அமைச்சர் காமராஜ் தீவிர பிரச்சாரம்

 

கொரடாச்சோி ஏப் 14–

அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாகை, திருவாரூர் தொகுதியில் அமைச்சர் காமராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாகை, திருவாரூர் தொகுதி அண்ணா திமுக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி இல்லாதவர்கள். அச்சமின்றி எவரும் சந்தித்து பேசமுடியும். எதிரணிக்கு இது சாத்தியமா? என்று அமைச்சர் இரா.காமராஜ் பிரச்சாரத்தின் போது கேள்வி எழுப்பினார்.

அண்ணா திமுக சார்பில் பேட்டியிடும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை ம.சரவணன் ஆகியோரின் வெற்றிக்காக அண்ணா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிர களப்பணியாற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் இரா.காமராஜ், பா.ஜ.க, தேமுதிக, பாமக, தமாகா, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர்கள் இருவரும் திருவாரூர் நகரம், புலிவலம், தண்டலை, கீழகாவதுகுடி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். இவர்களுடன் அமைச்சர் இரா.காமராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் இரா.காமராஜ் கூறியதாவது:–

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளும், முதல்வர் எடப்பாடியாரின் துரிதமான செயல்பாடுகளும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அண்ணா திமுகவில் இடம் கிடையாது. மக்களிடம் நெருக்கம் காட்டும் பண்பாளர்களுக்கு மட்டுமே பதவிகளும் பொறுப்புகளும் அளிக்கப்படும்.

தற்போது நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை.ம.சரவணன் ஆகியோர் குற்றப்பின்னணி இல்லாதவர்கள். இவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. எங்கள் வேட்பாளர்களை பொதுமக்கள் எவரும் எப்போது வேண்டுமானாலும் அச்சமின்றி சந்திக்க முடியும். மக்கள் இதனை உணர்ந்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *