செய்திகள்

அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி: பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள்: உடன்பாட்டில் கையெழுத்து

சென்னை, பிப்.28

அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்து ஆனது.

இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அண்ணா தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க.வுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நேற்று (27 ந்தேதி) ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அண்ணா தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ் நாட்டில் 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான உடன்படிக்கையில் கையொப்பம் இடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தல் உடன்படிக்கையின் போது, அண்ணா தி.மு.க. சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, எம்.பி., கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம், எம்.பி., கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான பி. தங்கமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆகியோரும்;

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசு, எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் கே. பாலு, புதுவை மாநில அமைப்பாளர் கோ. தன்ராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

பல கட்டங்களாக பேச்சு

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க பாரதீய ஜனதா கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது. சட்டமன்ற தேர்தலிலும் அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று கூறப்பட்டது.

அதற்கான முயற்சியில் மூத்த அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்ட தோடு, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரடியாக சந்தித்து பல கட்டங்களாக பேசிவந்தனர்.

இந்த நிலையில் பா.ம.க. 20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையில் இருந்து, உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை தளர்த்திக்கொண்டனர். அதற்கு அண்ணா தி.மு.க. அரசு பச்சைக்கொடி காட்டியது.

அதற்கேற்றாற்போல், சட்ட சபையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு தீர்மானமாக கொண்டுவந்து மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. சார்பில் இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதை உறுதி செய்தார்.

இதனையடுத்து அண்ணா தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகள்?

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘தொகுதி எண்ணிக்கை தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 தரப்பிலும் நிர்வாகிகள் அமர்ந்து பேசி, எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்ற முடிவு தெரிந்த உடன் அறிவிப்போம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *