செய்திகள்

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்

சசிகலான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

சென்னை, ஏப். 11–

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதனால் அண்ணா தி.மு.க.வை அவரால் வழிநடத்தி செல்ல இயலவில்லை.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேலும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையமும் அவர்களது தேர்வை ஏற்றுக்கொண்டது.

இதை எதிர்த்து சசிகலா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் 1.11.2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். சசிகலா மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்தனர். இதற்கு சசிகலா தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அண்ணா தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும் மேலும் சசிகலா வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.