செய்திகள்

அண்ணா தி.மு.க, பா.ஜ.க. விவசாயிகளின் பாதுகாவலன்: த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் பேச்சு

திருவாரூர் ஏப் 15–

அண்ணா தி.மு.க, பா.ஜ.க. ஆட்சிகள் விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்குகிறது என்று த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் பேசினார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தாழை ம.சரவணன் ஆகியோரை ஆதரித்து திருவாரூர் பேரூந்து நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஜி.கே. வாசன் பேசியதாவது:

கொளுத்தும் வெயிலையும் பாராமல் கூட்டத்திற்கு வந்துள்ள உங்களை பார்க்கும்போது அண்ணா தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என தெரிகிறது. மத்தியில் மோடி ஆட்சியால் இந்தியா வளர்ச்சி பெற்று நல்லரசு நாடாக செயல்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி உயர்வு பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது பாஜக ஆட்சியில் மேலோங்கியுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணா தி.மு.க. கூட்டணி அடித்தளமாக விளங்குகிறது. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகள் உள்ளன. ஒன்று அண்ணா தி.மு.க. தலைமையில் வெல்லப்போகும் கூட்டணி. மற்றொன்று உறுதியாக தோற்கப்போகும் தி.மு.க கூட்டணி. ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சிறுபான்மையின மக்களின் நலன் என அத்தனை தரப்பு மக்களின் நலன் காக்கின்ற கூட்டணி அண்ணா தி.மு.க.

ஏமாற்ற முடியாது

பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அடித்தட்டு மக்களின் நலனை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரஸ் 10 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில் ஒருவர்கூட சிறுபான்மையினர் இல்லை. இவர்கள் எப்படி சிறுபான்மையினர் நலன் காப்பார்கள். இனிமேல் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏமாற்ற முடியாது. ஏமாற்ற நினைத்தால் அவர்கள் ஏமாறுவார்கள். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பா.ஜ.க மற்றும் அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 60 வயதை தாண்டினால் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க உறுதிமொழி தரப்பட்டுள்ளது.. இதுபோன்ற அறிவிப்புகளை தந்து அண்ணா தி.மு.க.வும் பா.ஜ.க.வும் விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கிறார்கள்.

நமது வேட்பாளர்கள் அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆசியோடு போட்டியிடுகிறார்கள். உங்களது சுக துக்கங்களில் பங்குகொள்ள கூடிய வேட்பாளர்களாக இருக்கும் திருவாரூர் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், நாகை மக்களவை தொகுதியில் வேட்பாளர் தாழை ம.சரவணன் ஆகியோரை வெற்றிபெற செய்திட வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

அமைச்சர் இரா..காமராஜ், வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *