செய்திகள்

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க மண்டல வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு

பிப்ரவரி 5-–ந் தேதி முதல் 6 நாட்கள் நடக்கிறது

சென்னை, ஜன.27–-

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க, பிப்ரவரி 5–-ந் தேதி முதல் 6 நாட்கள் மண்டல வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்க இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.

அதுபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து, தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

கூட்ட விபரம்

பிப்ரவரி 5–-ந் தேதி முதல் 10–-ந் தேதி வரை 6 நாட்கள் கருத்து கேட்கப்படும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் மண்டலம் வாரியான சுற்றுப்பயண விவரம் வருமாறு:–-

5–-ந் தேதி காலை – சென்னை மண்டலம் (சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்), மாலை – வேலூர் மண்டலம் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை).

6–-ந் தேதி காலை – விழுப்புரம் மண்டலம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி), மாலை – சேலம் மண்டலம் (சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி).

7-–ந் தேதி காலை – தஞ்சாவூர் மண்டலம் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை), மாலை – திருச்சி மண்டலம் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை).

8–-ந் தேதி மாலை – கோவை மண்டலம் (கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி).

9-–ந் தேதி மாலை – மதுரை மண்டலம் (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்).

10–-ந் தேதி காலை – திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி).

மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் கலந்துகொண்டு ஆலோசித்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திடவேண்டும்.

கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், அமைப்புகள், மகளிர், மாணவர்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கயைில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *