செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி கூட்டணி: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

வேலூர், மார்ச் 16–

‘அண்ணா தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வலுவான மெகா வெற்றிக்கூட்டணி’ என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அண்ணா தி.மு.க. தலைமையில் ஒரு அங்கமாக புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-

ஏ.சி.சண்முகம் மாவட்டம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். விரைவில் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும். இவர் எம்.ஜி.ஆருடன் இருந்தவர். தற்போது தாய் கழகத்துடனே கூட்டணி அமைத்துள்ளார். இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். நமது மாவட்ட மக்களின் ஆதரவு பெற்றவர் அவர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும்.

அண்ணா தி.மு.க.வை விட்டு சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அவர்கள் விலை போய் விட்டார்கள். அண்ணா தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் நம்முடனே இருக்கின்றனர். அவர்கள் பக்கம் சென்றவர்கள் யாரும் முக்கிய நிர்வாகிகள் இல்லை. பதவி கிடைக்குமா என்பதற்காக தான் அவர்கள் வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் மக்கள் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும் என்று கூறினார்.

இதையடுத்து ஏ.சி. சண்முகம் பேட்டி அளிக்கையில்,

தமிழகத்தை பொருத்தவரை அண்ணா தி.மு.க. தலைமையில் தான் இந்த மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க.வில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் வாக்கும் அண்ணா தி.மு.க.வுக்கு தான் கிடைக்கும். அண்ணா தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த கூட்டணி வலுவான மெகா வெற்றிக் கூட்டணி. அண்ணா தி.மு.க.வை வளர்க்க நான் பாடுபட்டவன். அண்ணா தி.மு.க. வாக்குகளை பிரிக்க முடியாது. வேறு எங்கும் சிதறாது. மிகப்பெரிய சொத்து இரட்டை இலை சின்னம் தான். அண்ணா தி.மு.க. தொடங்கப்பட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைக்க நானும் ஒரு காரணமாக இருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், அண்ணா தி.மு.க. மாவட்ட பொருளாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், இளவழகன், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தசரதன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *