செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை, ஏப்.16–

புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதியிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.

நாட்டின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று நாங்கள் சொல்கிறோம். காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டார்.

‘நியூஸ் ஜெ’ டிவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

கேள்வி: நீங்கள் 8 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் பயணித்து 400–க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் மத்தியில் பேசி இருக்கிறீர்கள். மக்களின் எண்ணோட்டம் எப்படி உள்ளது.

முதல்வர் பதில்: கடந்த மாதம் 22–ந் தேதியில் இருந்து நான் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்கினேன். இன்று வரை பிரச்சாரம் செய்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆர்வமுடன் ஆரவாரத்துடன் முகமலர்ச்சியுடன் உணர்வுபூர்வமாக ஆதரவு தெரிவித்தார்கள். நான் இதுவரை 9 முறை வேட்பாளராக போட்டியிட்டிருக்கிறேன். மக்கள் எந்த அளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரியும். சிரித்த முகத்துடன் ஆதரவு தந்தனர். நிச்சயம் அண்ணா தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கேள்வி:– அம்மா மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் இது. எப்படி இருந்தது?

முதல்வர்: எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அம்மா எத்தனையோ சோதனைகளை சந்தித்தார். அதேபோன்று சோதனைகளை நாங்களும் சந்தித்தோம். சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். சில நேரங்களில் வேண்டுமென்றே எங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அதற்கு பதில் தருகிறோம். நிர்வாக திறமையுள்ள அரசாக இந்த அரசு உள்ளது. சாதனைகளை செய்து மத்திய அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறோம். மக்கள் எங்களை ஏற்று கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் தரக்குறைவு விமர்சனம்

கேள்வி: உங்களது பிரச்சாரத்துக்கும் தி.மு.க.வின் பிரச்சாரத்துக்கும் வித்தியாசம் தெரிகிறது. நீங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறீர்கள். ஆனால் அவர்கள் தனி நபரை தரக்குறைவாக விமர்சனம் செய்து உங்களை கீழ்தரமாக விமர்சிக்கிறார்களே? இதனை எப்படி பார்க்கிறீர்கள்.

முதல்வர்: ஸ்டாலின் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. எனவே விரக்தியில் அவர் வார்த்தைகளை கொட்டுகிறார். இந்த ஆட்சி 10 நாள் இருக்கும் என்றார். அதன் பின் 3 மாதம் தான் இருக்கும் என்றார். பின்னர் 6 மாதம் இருக்கும் என்றார். ஆனால் இன்று 2 ஆண்டுகளை கடந்து 3–வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். எனவே இதனை எல்லாம் பொறுத்து கொள்ள முடியவில்லை. ஆட்சியை கலைத்து விடலாம். கட்சியை உடைத்து விடலாம் என நினைத்தார். அது முடியவில்லை. எனவே தோல்வியில் விரக்தியில் அந்த வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். ஆட்சியை பிடித்து விடலாம் என்று அவர் நினைக்கிறார். அது நடக்காது. நடைபெற இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகள் அண்ணா தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள். அண்ணா தி.மு.க. மக்களை நம்பி உள்ளது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மாவின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்படுகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மக்கள் அச்சம் இல்லாமல் வாழ்கிறார்கள். எங்களை மக்கள் ஏற்கிறார்கள். மக்கள் ஏற்கும் கட்சி வெற்றி பெறும்.

கேள்வி: முந்தைய தேர்தலில் தி.மு.க. மீது நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டது. இன்று தி.மு.க. மீது வன்முறை புகார்கள் கூறப்படுகிறதே?

தி.மு.க. வன்முறை

முதல்வர்: மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க. முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்ணை அடித்து உதைக்கிறார். கதற கதற அந்த பெண்ணை காலால் மிதிக்கிறார். 15 நாட்களுக்கு முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரெயிலில் செல்லும் போது கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. பிரியாணி புரோட்டா கடைக்கு சென்று சாப்பிட்டு விட்டு பணம் தராமல் கடைக்காரரை தாக்கி இருக்கிறார்கள். அடுத்த நாளே அங்கு ஸ்டாலின் சென்று பஞ்சாயத்து செய்திருக்கிறார். செல்போன் கடைக்கு சென்று தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தி.மு.க. அராஜகம் எல்லை மீறி சென்று விட்டது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

கேள்வி: காவிரி மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் ராகுல் கூறியுள்ளாரே?முதல்வர்: காவிரி மேலாண்மை கூட்டம் பலமுறை நடந்தது. அது நடைமுறைக்கு வந்து விட்டது. ஸ்டாலின் முன்மொழிந்த பிரதமர் வேட்பாளர் ராகுல் கர்னாடகத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது மேகதாது அணை கட்டப்படும் என்று பேசி இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அவர் பதில் என்ன? அனைத்து விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேகதாது அணை கட்டினால் நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா விவசாயிகள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். தமிழகம் பாலைவனமாகி விடும். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.

கேள்வி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வாபஸ் பெறப்படும் என்று கூறியிருக்கிறார்களே?

முதல்வர்: ‘நீட்’ தேர்வை 2010–ம் ஆண்டு காங்கிரஸ் தான் அறிவித்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அப்போது இதனை தட்டி கேட்க திறமை இல்லை. இப்போது ‘நீட்’ தேர்வை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். ‘நீட்’ தேர்வு கூடாது என்று தான் எங்களது நிலைப்பாடு. கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சியின் போது தான் நுழைவு தேர்வு கொண்டு வரப்பட்டது. அம்மா தான் நுழைவு தேர்வை ரத்து செய்தார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை.

கேள்வி: தி.மு.க.வில் 6 நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு ‘சீட்’ கொடுத்திருக்கிறார்களே?

முதல்வர்: தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்தார்களோ அப்படி தான் நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். சேலம் தொகுதியில் போட்டியிடும் சரவணன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இயக்கத்துக்காக பாடுபட்டவர்களுக்கு தான் ‘சீட்’ கொடுத்திருக்கிறோம். தி.மு.க.வில் அப்படி எதிர்பார்க்க முடியாது. அந்த கட்சியின் தலைவரே வாரிசு வரவேண்டும் என்று தான் விரும்பினார். எனவே தான் மற்றவர்களின் வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் கட்சியை பொறுத்தவரை சாதாரண தொண்டர்கள், உழைப்பவர்களுக்கு தான் பதவி. நான் முதலமைச்சராக இருக்கிறேன். இந்த பதவியை நான் நினைத்து கூட பார்த்ததில்லை. 1974–ம் ஆண்டு இந்த இயக்கத்தின் கிளைச் செயலாளராக இருந்தேன். படிப்படியாக பல்வேறு பொறுப்புகளுக்கு வந்தேன். 9 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இதில் 3 முறை எம்.பி. தேர்தலிலும் 6 முறை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். இதில் சில முறை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன். எனக்கு அம்மா நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவி தந்தார். அப்போது தமிழகம் முழுவதும் சிறந்த சாலைகள் அமைத்து தந்தேன். பின்னர் எனக்கு அம்மா பொதுப்பணி துறையை கூடுதலாக கொடுத்தார். இப்போது குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறோம். 1000 கோடியில் தடுப்பணைகள் கட்டுகிறோம். காவிரி– கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது டெல்டா மக்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல் பெறுவார்கள்.

கேள்வி: நீங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறீர்கள். ஆனால் தி.மு.க.வில் பணப்பட்டுவாடா நடக்கிறது. கறுப்பு பணத்தை வைத்து வெற்றி பெற நினைக்கிறார்களா?

முதல்வர்: அண்ணா தி.மு.க.வை ஊழல் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தி.மு.க.விடம் கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

கேள்வி: வருமான வரித்துறையினரை எங்கள் மீது ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

ஸ்டாலினுக்கு தோல்வி பயம்

முதல்வர்: ஸ்டாலின் தோல்வி பயத்தில் பேசுகிறார். தேர்தல் ஆணையத்துக்கு வந்த தகவல் அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது. பணத்தை வைத்து தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அம்மா இருந்தபோத இடம் பெற்றிருந்தது தான். இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள்.

கேள்வி: நீங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று கூறுகிறீர்கள். எதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் உள்ளதே?

முதல்வர்: நாங்கள் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறுகிறோம். எதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். மோடி தான் நிலையான ஆட்சியை தருவார். அவர் தலைமையில் நாடு பாதுகாப்பானதாக இருக்கும். தமிழ் நாட்டில் காங்கிரசடன் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் கேரளாவில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள். குழப்ப நிலை உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். கேரளாவில் ஸ்டாலின் யாருக்கு ஆதரவு தருவார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *