செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணியில் தஞ்சாவூர் – த.மா.கா.; வேலூர் – புதிய நீதிக்கட்சி

சென்னை, மார்ச் 15

அண்ணா தி.மு.க. கூட்டணியில் தஞ்சாவூர் பார்லிமெண்ட் தொகுதி த.மா.கா. கட்சிக்கும், வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், புதிய நீதிக்குட்சி, த.மா.கா., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக மீதியுள்ள 20 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது.

இன்னும் ஓரிரு நாளில் அண்ணா தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்ற பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது.

பார்லிமெண்ட் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா. போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா, அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்களது கூட்டணியை காங்கிரஸ் தி.மு.க. கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. இதனாலேயே, எதிராகப் பேசி வருகிறார்கள். நாங்கள் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டேன் என்பதை பலமுறை பதிவு செய்துள்ளேன்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணியில் த.மா.கா. இடம் பெறவில்லை. தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநிலக் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். தமிழக மக்கள், தேசிய நலனுக்கு ஏற்ற வகையிலேயே எங்களது செயல்பாடுகள் அமையும்.

ஒட்டுமொத்த பெரும்பாலான தமிழக மக்களின் எண்ணமும், மாவட்ட ரீதியான தொண்டர்களின் கருத்துகளையும் கேட்டு, கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

இன்றைய அரசியல் நிலை, தமிழகச் சூழல், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், நல்ல எண்ணங்களின் அடிப்படையில் இக்கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இக் கூட்டணி, பார்லிமெண்ட் தேர்தலில் தொடங்கி, உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிட்டு வெற்றி பெறும். பார்லிமெண்ட் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா. போட்டியிட முடிவு செய்துள்ளது என்றார் ஜி.கே.வாசன்.

வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்

அண்ணா தி.மு.க. கூட்டணியில், வேலூர் பார்லிமெண்ட் தொகுதி புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியாத்தத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அண்ணா தி.மு.க. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்து வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் ஏ.சி. சண்முகம் பேசியதாவது: அண்ணா தி.மு.க.வில் எம்.ஜி.ஆரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றிபெற்று சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் பணியாற்றியுள்ளேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு எனது தாய்க் கட்சியான அண்ணா தி.மு.க.வில், இரட்டை இலை சின்னத்தில், வேலூர் பார்லிமெண்ட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இந்தக் கூட்டணியில் நான் இணைந்தது எனது தாய் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என்றார் அவர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், அண்ணா தி.மு.க. நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, ஒன்றியச் செயலர் வி. ராமு மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *