போஸ்டர் செய்தி

அண்ணா தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி

சென்னை, மார்ச்.14-

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இணைந்த த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வையும் இந்த கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜி.கே.வாசனிடம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அண்ணா தி.மு.க. – த.மா.கா. இடையே ஒரு தொகுதி ஒதுக்குவதாக கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை த.மா.கா. ஆதரிக்கும் என்று ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும்’ தெரிவித்தார்.

ஜி.கே.வாசன் கூறுகையில், ‘தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்”, என்றார்.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பாரதீய ஜனதாவுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4 மற்றும் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 வீதம் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

எனவே மீதமுள்ள 20 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. களம் காணுகிறது.

ஆலோசனை கூட்டம்

அண்ணா தி.மு.க. கூட்டணியில் யார், யாருக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது? என்பது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த கூட்டத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிக்க வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பட்டியல் அண்ணா தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *