போஸ்டர் செய்தி

அண்ணா தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 2–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இன்று புதிய தமிழகம் கட்சி இணைந்தது. அந்த கட்சிக்கு பார்லிமெண்ட் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான ஒப்பந்தத்தில், அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அண்ணா தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எந்த இழுப்பறியும் இல்லை. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு, சந்தோஷமான முடிவு எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்து கூட்டணியில் புதிய தமிழகம் சேர்ந்துள்ளதை அறிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்ணா தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு பார்லிமெண்ட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தே.மு.தி.க.வுடன் சுமூக பேச்சு

தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எந்த இழுபறியும் இல்லை. ஓரிரு தினங்களில் நல்ல முடிவு ஏற்படும். சந்தோஷமான முடிவு எட்டப்படும் என்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணசாமி பேட்டி

பின்னர் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா – அண்ணா தி.மு.க கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் போட்டியிடும். புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் முழு ஆதரவு அளிக்கும். எங்களுக்கு சின்னம் பிரச்சினை இல்லை. மக்களவை தேர்தலில் புதிய தமிழகம் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என கிருஷ்ணசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அண்ணா தி.மு.க.–-பா.ம.க. இடையே கடந்த 19–ந்தேதி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பார்லிமெண்ட் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அண்ணா தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ராஜ்ய சபை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களுக்கு பா.ம.க. முழு ஆதரவு தருவது என தீர்மானிக்கப்பட்டது.

பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதி

இதனையடுத்து பாரதீய ஜனதா தலைவர்கள், அண்ணா தி.மு.க. தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்கள். இதில் பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு அன்றே ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இப்போது தே.மு.தி.க.வுடன் அண்ணா தி.மு.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். தே.மு.தி.க.வுக்கு அனேகமாக 3 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அண்ணா தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, புதிய தமிழகம் ஆகியவை சேர்ந்துள்ளது. 3 கட்சிகளுக்கும் மொத்தம் 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 26 தொகுதிகள் அண்ணா தி.மு.க. வசம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *