போஸ்டர் செய்தி

அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது

சென்னை, ஏப்.15-

தமிழ்நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது.

இன்னும் ஒரு நாளே இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். சென்ற இடமெல்லாம் மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும் கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

இதேபோன்று, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலில்…

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகளும் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரச்சாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது.

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால், அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு மட்டும் தேர்தல் பிரசாரத்தை இரவு 7 மணிவரை நீடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

18–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

அண்ணா தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு

அண்ணா தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. கூட்டணி கொள்கை இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி, குழப்ப கூட்டணி என அண்ணா தி.மு.க. தலைவர்கள் ஆதாரங்களுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருகிறார்கள்.

எடப்பாடி சூடாக பதில்

ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுடசுட பதில் அளித்து வருகிறார்.

அவரது பேச்சுக்கு சவால்விட்டு முதலமைச்சர் கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஸ்டாலினால் பதில் கூற இயலவில்லை. எனவே அடுத்த பிரச்சினைக்கு சென்று விடுகிறார். எனவே இதனை எல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது ஆகியவைகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அண்ணா தி.மு.க.வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும் மக்களின் எழுச்சி உற்சாகம், வரவேற்பு இதனை காட்டுகிறது. இதனால் தி.மு.க. கூட்டணியில் தோல்வி பயம் வந்துள்ளது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி பொய் வாக்குறுதி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது மக்களிடம் எடுபடவில்லை.

150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி (சுமார் 100 வீரர்கள்) துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பிரச்சார பணிகளில் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை மாலை 6 மணிக்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன சோதனை

தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.129.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7 கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் கடந்த 11-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்டத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் (புதுவை) உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *